நியூயார்க்: அமெரிக்க ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவின் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் ரோகன் போபன்னா - இந்தோனேஷியாவின் அல்டிலா சுட்ஜியாடி இணை ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ் மற்றும் செக் குடியரசின் கேடரினா சினியாகோவா இணையை எதிர்கொண்டது.
இதில் போபன்னா - சுட்ஜியாடி இணை தங்களது முதல் செட்டை 0-க்கு 6 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து இரண்டாவது செட்டில் சுதாரித்து கொண்ட இந்த இணை கடுமையாக சவால் அளிக்கத் தொடங்கியது. இதனால் இரண்டாவது செட் டைபிரேக்கர் சுற்றுக்கு சென்று அதில் ரோகன் போபன்னா - அல்டிலா சுட்ஜியாடி இணை 10-க்கு 7 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து அபாரமாக விளையாடிய இந்தியா- இந்தோ ஜோடி எதிரணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. அபாரமாக விளையாடிய ரோகன் போபன்னா - அல்டிலா சுட்ஜியாடி இணை போட்டியை வென்று கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. கால் இறுதியில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் மற்றும் செக் குடியரசின் பார்போரா கிரிஜிகோவா இணையை ரோகன் போபன்னா - அல்டிலா சுட்ஜியாடி ஜோடி எதிர்கொள்கிறது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்பை தவறவிட்ட ரோகன் போபன்னா அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடரில் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ரோகன் போபன்னா சாம்பியன் பட்டம் வென்றார். 43 வயதான ரோகன் போபன்னா அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற சிறப்பையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரரை பின்னுக்குத் தள்ளிய ஜோ ரூட்! - England Cricketer Joe Root