ஹைதராபாத்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஏறத்தாழ 17 ஆண்டுகளுக்குப் பின்னர் 20 ஓவர் உலக கோப்பையையும், 11 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐசிசி கோப்பையையும் வென்று இந்திய அணி வரலாறு படைத்தது. இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ஐசிசி இந்தியாவிற்கு சாதகமாக நடந்து கொண்டதாக மைக்கேல் வாகன் பல விமர்சனங்களை தெரிவித்திருந்தார்.
குறிப்பாக, "ட்ரினிடார் நகரில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல் அரையிறுதிப்போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 6 மணிக்கு நடைபெற்றது. ஆனால், இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி காலை 6 மணிக்கு நடந்தால் இந்திய ரசிகர்கள் யாரும் பார்க்க மாட்டார்கள் என அப்போட்டி கயானா மைதானத்தில் தான் நடக்கும் என ஐசிசி அறிவித்தது.
இதனால் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இந்தியா விளையாடிய போட்டியை ரசிகர்கள் கண்டுகளித்தனர். இவ்வாறு ஐசிசி இந்தியாவிற்கு சாதகமாகவும், மற்ற அணிகளுக்கு அநியாயம் செய்வதாகவும் விமர்சனம் செய்தார். இப்போட்டி ஒருவேளை ட்ரினிடார் நகரிலேயே நடைபெற்றிருந்தால் இந்தியாவை தங்களுடைய இங்கிலாந்து அணி வென்றிருக்கும்" எனவும் தெரிவித்தார்.
மைக்கேல் வாகனின் இந்த விமர்சனங்களுக்கு ரவி சாஸ்திரி தக்க பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் "மைக்கேல் வாகன் என்ன வேண்டுமானாலும் சொல்வார். ஆனால், அதற்காக இந்தியாவில் யாரும் கவலைப்படப் போவதில்லை. அவர் முதலில் இங்கிலாந்து அணியின் பிரச்னைகளை தீர்க்கட்டும். இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து விளையாடிய ஆட்டத்தை பார்த்து அவர் அந்த அணிக்கு முதலில் அறிவுரை கூறட்டும்.
இங்கிலாந்து அணி 2 முறை உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது. ஆனால், இந்தியா 4 முறை உலக்கோப்பையை கைப்பற்றியுள்ளது. ஆனால், மைக்கேல் வாகன் இதுவரை ஒரு உலகக்கோப்பையை கூட வென்றது கிடையாது. வாகன் என்னுடைய நண்பனான போதிலும், அவருக்கு நான் வழங்கும் பதில் இது தான்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை வெற்றியுடன் துவக்கியது தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி.. 1-0 என முன்னிலை!