துபாய்: இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான ரவி சாஸ்திரி இந்திய அணிக்காக 80 டெஸ்ட் போட்டிகளும், 150 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். டெஸ்ட்டில் 151 விக்கெட்களும், 3,830 ரன்களும் குவித்துள்ளார். அதேபோல் ஒருநாள் போட்டியில் 129 விக்கெட்களும், 3,108 ரன்களும் குவித்துள்ளார்.
இவரது காலகட்டத்தில் இந்திய அணிக்கு இவரது பங்கு மிகவும் மகத்தானதாக பார்க்கப்படுகிறது. கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்ற பின் கிரிக்கெட் வர்ணனையாளராக வலம் வருகிறார். இவர் இந்திய அணியின் பயிற்சியாளராக இரண்டு முறை இருந்துள்ளார். முதலில் 2014 முதல் 2016 வரை இயக்குநராகவும், அதன் பிறகு தலைமை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
இவர் பயிற்சியாளராக இருந்த போது விராட் கோலி தலைமையிலான டெஸ்ட் அணி ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்து இரண்டு டெஸ்ட் தொடர்களை வென்றது. ஆனால் சர்வதேச தொடர்களில் ஜொலித்த ரவி சாஸ்திரி - விராட் கோலி கூட்டணிக்கு ஐசிசி கோப்பை ஒரு எட்டா கனியாகவே இருந்துள்ளது.
உலக சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தோல்வி, 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துடனான தோல்வி, 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் தோல்வி என ஐசிசி கோப்பைகள் கனவாகவே இருந்தது.
இந்த நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தலைமைப் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரிக்கு பிசிசியின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் தெரிவித்திருப்பதாவது, "இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவி சாஸ்திரிக்கு பிசிசிஐயின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. அதேபோல் கடந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது இந்திய அணியின் தொடக்க வீரரான சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுப்மன் கில் கடந்த அண்டு ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2,000 ரன்கள் எடுத்து சாதனையை படைத்தார். இதில் 5 சதங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த டி20 அணியை அறிவித்த ஐசிசி.. கேப்டனாக இந்திய வீரர் தேர்வு!