ராஜ்கோட் : இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட 5 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்கிய முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து விசாகபட்டினத்தில் கடந்த 2ஆம் தேதி தொடங்கிய 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்திலும், பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற்ற 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்நிலையில், இந்திய அணியில் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் தசைப்பிடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து பாதியில் விலகினார். இதையடுத்து மூன்றாவது டெஸ்ட்டில் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதியில் அவரது பெயர் அணியில் இடம் பெறவில்லை.
இந்நிலையில், வரும் 23ஆம் தேதி ராஞ்சியில் நடைபெற உள்ள 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கே.எல்.ராகுல் அணிக்கு திரும்புவார் என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடும் வேலைப்பளு காரணமாக இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முகமது சிராஜ்க்கு ஒய்வு அளிக்கப்பட்டு இருந்த நிலையில், 4வது டெஸ்ட்டில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் பும்ரா இதுவரை 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி வருகிறார்.
மார்ச் 7ஆம் தேதி தர்மசாலாவில் தொடங்க உள்ள 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மீண்டும் பும்ரா அணியில் களம் காணுவார் எனக் கூறப்படுகிறது. 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இந்திய அணி நாளை (பி[. 20) ராஞ்சி சென்று பயிற்சி மேற்கொள்ள உள்ளது.
இதையும் படிங்க : தலையில் பந்து தாக்கி முஸ்தபிசுர் ரஹ்மான் காயம்! பயிற்சியின் போது விபரீதம்!