சண்டிகர் : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.9) இரவு 7.30 மணிக்கு சண்டிகர் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 23வது லீக் ஆட்டத்தில் சன்ரைசஸ் ஐதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பந்துவீச்சை தேர்வு செய்தார். நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஐதராபாத் அணிகள் விளையாடிய 4 ஆட்டங்களிலும் முறையே தலா 2 வெற்றி, 2 தோல்விகளுடன் ஒரே புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன. ரன்ரேட் அடிப்படையில் சன்ரைசஸ் ஐதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் 4வது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 5வது இடத்திலும் உள்ளன.
புள்ளிப் பட்டியலில் அடுத்த நிலைக்கு முன்னேற வேண்டும் என்றால் இந்த ஆட்டத்தில் இரண்டு அணிகளும் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் உள்ளன. ஐதராபாத் அணி கடைசியாக விளையாடிய ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சொந்த மண்ணில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.
அந்த உத்வேகத்துடன் இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி எதிர்கொள்ளும். அதேபோல் பஞ்சாப் கிங்ஸ் அணியும் தனது கடைசி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணான அகமதாபாத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. அதேநேரம் இன்றைய ஆட்டம் சண்டிகரில் நடைபெறுவதால் பஞ்சாப் அணிக்கு அது கூடுதல் பலமாக காணப்படும்.
சொந்த மண்ணில் பஞ்சாப் அணியை வீழ்த்துவது என்பது ஐதராபாத் அணிக்கு சாதாரணமான விஷயம் அல்ல. முழு உத்வேகத்துடன் களமிறங்கினால் மட்டுமே பஞ்சாப் அணிக்கு ஐதராபாத்தால் நெருக்கடி கொடுக்க முடியும். வெற்றிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக மோதிக் கொள்வார்கள் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல் :
சன்ரைசஸ் ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, எய்டன் மார்க்ராம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், நிதிஷ் ரெட்டி, ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், நடராஜன்.
பஞ்சாப் கிங்ஸ்: ஷிகர் தவான் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சாம் கர்ரான், சிக்கந்தர் ராசா, ஷசாங்க் சிங், ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.
இதையும் படிங்க : மும்பை அணி கொடுத்த ஆஃபர்..சிஎஸ்கேவுக்கு விளையாடாமல் போக காரணம்? மனம் திறந்த தினேஷ் கார்த்திக் - Dinesh Karthik