கவுகாத்தி: கடந்த மார்ச் மாதம் தொடங்கிய 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் 65வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.
அசாமில் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (மே.15) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டு இழப்பிற்கு 144 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக ரியான் பராக் 48 ரன்கள் விளாசினார். பஞ்சாப் அணி தரப்பில் ராகுல் சாஹர், ஹர்ஷல் பட்டேல் மற்றும் சாம் கரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பஞ்சாப் கிங்ஸ் அணி.
பிரப்சிம்ரன் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் பிரப்சிம்ரன் 6 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த ரூசோ 22 ரன்களிலும், சஷாங் சிங் ரன் ஏதும் எடுக்காமால் டக் அவுட் ஆகி வெளியேறினர். இதனால் ஆட்டத்தில் சிறிது தொய்வு ஏற்பட்டது.
இதனிடையே மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ 6 ரன்களில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இதனால் 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பஞ்சாப் கிங்ஸ் அணி. இதனையடுத்து களமிறங்கிய சாம் கரன் - ஜிதேஷ் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து சரிவில் இருந்த அணியை மீட்டெடுத்தனர்.
இதில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜிதேஷ் 22 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுதிய கேப்டன் சாம் கரன் அரைசதம் விளாசினார். இறுதியில் 18.5 ஓவர்களில் இலக்கை எட்டிய பஞ்சாப் கிங்ஸ், 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.
சாம் கரன் 63 ரன்களுடனும், அசுடோஸ் சர்மா 17 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக அவேஷ் கான் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும், போல்ட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பிளே ஆப் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்ற ராஜஸ்தான் அணி தொடர்ச்சியாக பெறும் 4வது தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 48 ஆண்டுகளுக்கு பின் சென்னை சேப்பாக்கத்தில் களமிறங்கும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி! - யாருடன் மோதுகிறது தெரியுமா?