ஐதராபாத்: 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை தொடரை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. லாஹூர், கராச்சி மற்றும் ராவல்பிண்டி ஆகிய மைதானங்களில் பெரும்பாலும் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான முழு அதிகாரப்பூர்வ அட்டவணையை இதுவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிடவில்லை. தொடரை நடத்துவதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இது ஒரு புறம் இருக்க சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கலந்து கொள்வது குறித்து இந்தியா இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் செல்வது தொடர்பான முடிவில் இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது. இந்த நிலையில் தான் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய ரசிகர்களை கலந்து கொள்ள வைப்பதற்காக கவர்ச்சிகர திட்டத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும் அந்நாட்டு உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வி இதுகுறித்து கூறுகையில், இந்திய ரசிகர்களுக்காக சிறப்பு டிக்கெட் கோட்டா வசதியை அமல்படுத்த உள்ளதாகவும், அதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி தொடரை காண வரும் இந்தியர்களுக்கு சுலபமாக விசா கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றார்.
மேலும், இந்திய அணி பாகிஸ்தான் வர வேண்டும், இங்கு வருவதை ரத்து செய்வதையோ அல்லது ஒத்திவைப்பதையோ எதிர்பார்க்க விரும்பவில்லை என்றும் பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியில் அனைத்து அணிகளும் ஒருசேர கலந்து கொள்ளும் என்று நம்புவதாகவும் கூறினார்.
2008ஆம் ஆண்டு நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் இந்தியா - பாகிஸ்தான் நேரடியாக கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. மாறாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் பல்வேறு விளையாட்டு தொடரிகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொதுவான இடங்களில் மட்டுமே நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
அதேபோல் பாகிஸ்தானும் ஐசிசியின் சர்வதேச கிரிக்கெட் தொடரை தனியாக நடத்தி ஏறத்தாழ 28 ஆண்டுகள் ஆகின்றன. கடைசியாக 1996 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் விளையாடுவதற்கு மத்திய அரசின் ஒப்புதலை எதிர்நோக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டாப் 5 அதிக தொகை ரீடென்ஷன் வீரர்கள்! உள்ளூர் வீரர்களுக்கு சவால் விடும் வெளிநாட்டு வீரர்கள்!