பிரான்ஸ்: பாரீஸ் ஒலிம்பிக்கில் நேற்று (ஆக.5) இந்தியாவுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்தியா 2 பதக்கங்களை வெல்லும் வாய்ப்பு இருந்த போதும் பேட்மிண்டன் வீரர் லக்ஷ்யா சென் மற்றும் மகளிர் ஸ்கீட் கலப்பு குழு பிரிவில் இந்திய வீராங்கனைகள் அனந்த்ஜித் சிங் நருகா மற்றும் மகேஸ்வரி சவுகான் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.
இந்நிலையில், இன்று (ஆக.6) 11வது நாளில் இந்தியா முக்கிய ஆட்டங்களில் விளையாடுகிறது. குறிப்பாக அரையிறுதியில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி தங்கத்தை வெல்ல காத்திருக்கும் இந்திய ஹாக்கி அணி இன்று ஜெர்மனியை எதிர்கொள்கிறது. பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் 11வது நாளில் இந்திய வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் போட்டிகளின் முழு அட்டவணையை இந்த செய்தியில் காணலாம்.
டேபிள் டென்னிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக்கின் 11வது நாளில், டேபிள் டென்னிஸ் குழு போட்டியில் இந்திய ஆண்கள் அணி முதல் ஆட்டத்தில் விளையாடுகிறது. மானவ் தக்கர், சரத் கமல், ஹர்மீத் தேசாய் ஆகியோர் சீன அணியுடன் இன்று ரவுன்ட ஆப் 16 சுற்றில் விளையாடுகின்றனர். ஆண்கள் அணி மோதும் போட்டி பிற்பகல் 1:30 மணிக்கு நடைபெறுகிறது.
தடகளம்: இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் போட்டியின் 11வது நாளில் விளையாடுகிறார். அவர் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதிச் சுற்றில் இன்று களம் காணுகிறார். நீரஜ் சோப்ரா தவிர்த்து மற்றொரு இந்திய வீரர் கிஷோர் குமார் ஜெனாவும் இன்று களம் காணுகிறார். ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று மதியம் 1:50 மணிக்கு தொடங்குகிறது.
மகளிர் தடகளம்: பெண்களுக்கான 400 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் சுற்றில் இந்தியாவின் கிரண் பஹல் இன்று களம் காணுகிறார். அவர் இந்தியாவுக்காக பதக்கம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களுக்கான 400மீ ஸ்டீபிள்சேஸ் சுற்று மதியம் 2:20 மணிக்கு நடைபெறுகிறது.
மல்யுத்தம்: இந்தியாவின் நட்சத்திர பெண் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோ எடை பிரிவில் இன்று விளையாடுகிறார். இது தவிர 68 கிலோ பிரிவில் இந்தியாவின் நிஷா தஹியா விளையாடுகிறார். தற்போது காலிறுதியில் விளையாடி வரும் அவர், இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், 11வது நாளான இன்று பதக்கத்திற்காக விளையாடலாம். வினேஷ் போகத் கலந்து கொள்ளும் பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவில் மல்யுத்த போட்டி மதியம் 2:30 மணிக்கு நடைபெறுகிறது.
ஹாக்கி: ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி ஜெர்மனியுடனான அரையிறுதிப் போட்டியில் களமிறங்குகிறது. காலிறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட் அவுட்டில் கிரேட் பிரிட்டனை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. தற்போது இறுதிப் போட்டிக்கு சென்று தங்கப் பதக்கம் வெல்வதே இந்திய அணியின் நோக்கமாக உள்ளது. இந்தியா vs ஜெர்மனி அணிகள் இடையிலான் ஆண்கள் ஹாக்கி அரையிறுதி ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு நடைபெறுகிறது.
இதையும் படிங்க: ஒலிம்பிக் பேட்மிண்டன்: நூலிழையில் கைநழுவிய பதக்கம்! - Paris Olympics 2024