பாரீஸ்: பராகுவேவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை லுவானா அலான்சோ (20), ஒலிம்பிக் தொடரின் நீச்சல் பிரிவில் 100 மீ பட்டர்ஃபிளை போட்டியில் பங்கேற்றார். பின்னர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை 0.24 நொடிகளில் தவறவிட்டுள்ளார்.
இந்த நிலையில் லுவானாவின் அழகு மற்ற வீரர்களின் கவனத்தைச் சிதறடிப்பதாகக் கூறப்பட்டது. மேலும் அந்த வீராங்கனை சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்து இருக்கும் லுவானா, திடீரென நீச்சல் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் இந்த விவகாரம் பேசுபொருளானது.
பொதுவாக ஒலிம்பிக் போட்டியில் ஒரு வீரர் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் கூட சக வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக ஒலிம்பிக் கிராமத்தில் தங்க அனுமதிக்கப்படுவர். ஆனால் லுவானாவை அந்நாட்டு நிர்வாகிகள் சொந்த ஊருக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய பராகுவே ஒலிம்பிக் குழுவின் தலைவரான லாரிசா ஷேரர் கூறியதாவது "லுவானா அலான்சோவின் இருப்பு பராகுவே அணிக்குள் பொருத்தமற்ற சூழ்நிலையை உருவாக்குகிறது. நாங்கள் அறிவுறுத்தியபடி விளையாட்டு வீரர்களின் கிராமத்தில் இரவைக் கழிக்காததால் நாங்கள் அவரை அனுப்பிவிட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.
மறுப்பு: இதனை முற்றிலும் மறுத்திருந்த லுவானா அலான்சோ, இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாவது,"நான் ஒலிம்பிக் குழுவிலிருந்து அகற்றப்படவோ வெளியேற்றப்படவோ இல்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தவறான தகவல்களைப் பரப்புவதை நிறுத்துங்கள். நான் இதுதொடர்பாக எந்த விளக்கமும் அளிக்க விரும்பவில்லை" எனவும் குறிப்பிட்டிருந்தார்.
20 வயதில் ஓய்வு: இந்த பதிவை வெளியிட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே நீச்சல் விளையாட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார். இதுதொடர்பாக லுவானா வெளியிட்டுள்ள பதிவில்."என்னை மன்னிக்கவும், நான் நீச்சலில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இதுவரை ஆதரவு அளித்த பராகுவே மக்களுக்கு நன்றி" என குறிப்பிட்டு இருந்தார்.
அழகு காரணமாக வெளியேற்றப்பட்டாரா? லுவானா அலான்சோ வீரர்களை உற்சாகப்படுத்துவதை விட்டுவிட்டு, தனது சொந்த விருப்பங்களுக்காக யாருக்கும் தெரியாமல் ஒலிம்பிக் கிராமத்திலிருந்து வெளியேறி வெளியில் சுற்றினார் என சில சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அவர் ஆடை அணியும் விதமும், பிறருடன் பழகும் விதமும் சிலருக்கு கவனச்சிதறலை ஏற்படுத்தியது என கூறப்படுகிறது. மேலும் அவரை ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என பராகுவே நாட்டை சேர்ந்த வீரர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: "நீரஜ் மட்டும்மல்ல தங்கம் வென்ற அர்ஷத்தும் என் மகன்தான்" - நீரஜ் சோப்ராவின் தாய் நெகிழ்ச்சி!