ஐதராபாத்: சரியாக 11 ஆண்டுகளுக்கு முன், இதே நவம்பர் 2ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா தனது கன்னி இரட்டை சதத்தை விளாசினார். 2013ஆம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி ஒரேயொரு டி20 மற்றும் 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது.
இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்:
இதில் வழக்கம் போல் டி20 தொடரில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. ஆனால், ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியா நினைத்தது போன்று இல்லை. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி வாகை சூடியது. மீண்டும் மூன்றாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது.
நான்கு மற்றும் ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மழை மற்றும் பேரிடர் காரணமாக கைவிடப்பட்டன. இருப்பினும், 6வது போட்டியில் மீண்டு வந்த இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 2-க்கு 2 என்ற கணக்கில் சமநிலையை கொண்டு வந்தது. இன்னும் ஒரேயொரு ஒருநாள் போட்டி மட்டுமே மீதமுள்ளது.
𝗧𝗪𝗢 𝗛𝗨𝗡𝗗𝗥𝗘𝗗 𝗔𝗡𝗗 𝗡𝗜𝗡𝗘 🤯#OnThisDay in 2013, ℝ𝕆 slammed the first of his 3 double-centuries in ODI cricket 💥#MumbaiMeriJaan #MumbaiIndians | @ImRo45 pic.twitter.com/4anZzveqzk
— Mumbai Indians (@mipaltan) November 2, 2024
தொடர் யாருக்கு?:
தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 7வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அப்போது தெரியாது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அடுத்து களத்தில் என்ன நடக்கப் போகிறது என்று.
இந்திய அணியின் இன்னிங்சை ரோகித் சர்மா - ஷிகர் தவான் ஜோடி தொடங்கி வைத்தது. முதலில் நிதானம் காட்டிய இந்த ஜோடி அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கியது. சீரான இடைவெளியில் சென்று கொண்டு இருந்த ஆட்டத்தில் வேகத்தடை வந்தது போல் ஷிகர் தவான் விக்கெட் வீழ்ந்தது.
சிம்ம சொப்பனமாக திகழ்ந்த இந்திய வீரர்கள்:
தன் பங்குக்கு தவான் 60 ரன்களை எடுத்துக் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி டக் அவுட்டாகி பெரும் ஏமாற்றம் அளித்தார். ஒருமுனையில் சுரேஷ் ரெய்னா (28 ரன்), யுவராஜ் சிங் (12 ரன்) என அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்து கொண்டு இருந்தாலும், மறுமுனையில் ரோகித் சர்மா புகுந்து விளையாடிக் கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் தான் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவால் அளிக்கக் கூடிய ஜோடி கைகோர்த்தது. ஒரு புறம் சதத்தை கடந்து அதிரடியாக விளையாடி வரும் ரோகித் சர்மா, மறுபுறம் கேப்டன் தோனி. இருவரும் கூட்டணி அமைத்து ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தனர்.
கன்னி இரட்டை சதம்:
இருவரும் கூட்டணி அமைத்து பெங்களுரூ சின்னசாமி மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காட்டினர். 49வது ஓவரின் முதல் பந்தில் சிக்சர் விளாசிய ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தை விளாசினார். 114 பந்துகளில் இரட்டை சதத்தை விளாசி ரோகித் சர்மா புது வரலாறு படைத்தார்.
🏏 209 runs
— ICC (@ICC) November 2, 2020
⭐ 158 balls
🔥 12 fours, 16 sixes#OnThisDay in 2013, Rohit Sharma slammed the first of his three ODI double centuries, against Australia in Bangalore.
He was the third double centurion from India at the time, after Sachin Tendulkar and Virender Sehwag 💯💯 pic.twitter.com/aZOhUjqC1o
மேலும் சச்சினுக்கு அடுத்தபடியாக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய இரண்டாவது இந்தியர் என்ற சாதனையையும் ரோகித் சர்மா படைத்தார். கடைசி ஓவரில் ஆட்டமிழந்த ரோகித் சர்மா மொத்தம் 158 பந்துகளில் 12 பவுண்டரி 16 சிக்சர் விளாசி மொத்தம் 209 ரன்களை குவித்தார்.
அன்றே சொன்ன ரோகித்:
அன்றே இந்திய அணியை வழிநடத்த தான் தகுதியானவன் என்று ரோகித் சர்மா நிரூபித்துவிட்டார். மறுமுனையில் தோனியும் தன் பங்குக்கு 62 ரன்களை விளாசினார். ரோகித் சர்மாவின் இரட்டை சதத்தின் உதவியுடன் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 383 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணியை இந்திய வீரர்கள் 45.1 ஓவர்களுக்குள் சுருட்டினர். ஆஸ்திரேலிய அணி 326 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. அந்த ஆட்டத்தில் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மட்டுமின்றி 7 போட்டிகள் கொண்ட தொடரை 3-க்கு 2 என்ற கணக்கிலும் இந்திய அணி கைப்பற்றி வரலாறு படைத்தது.
இதையும் படிங்க: 2025 ஐபிஎலில் இருந்து விலகும் சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திரம்! யார் தெரியுமா?