புவனேஷ்வர்: பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் பதக்கம் வென்றது. ஸ்பெயின் அணியை 2-க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. இந்நிலையில், வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி இன்று (ஆக.21) ஒடிசா சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
பிஜூ பட்நாயக் விமான நிலையத்திற்கு வந்த இந்திய ஹாக்கி அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து இந்திய ஹாக்கி வீரர்கள் ரோடு ஷோவில் ஈடுபட்டனர். சாலை வழியாக இந்திய ஹாக்கி அணி வீரர்கள் கலிங்கா மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு ஒடிசா முதலமைச்சர் மோகன் சரன் மாஜி இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்.
முன்னதாக பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம் பிடித்த ஒடிசா வீரர் அமித் ரோஹிதாஸ்க்கு 4 கோடி ரூபாயை பரிசுத் தொகையாக முதலமைச்சர் மோகன் சரன் மாஜி அறிவித்து இருந்தார். மேலும் இந்திய ஹாக்கி வீரர்கள் அனைவருக்கும் தலா 15 லட்ச ரூபாயை பரிசுத் தொகையாக அறிவித்தார்.
மேலும் இந்திய ஹாக்கி அணியின் உதவியாளர்கள் குழுவுக்கு 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்து இருந்தது. 1972 முனிச் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு, ஏறத்தாழ 52 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியா தொடர்ந்து வெண்கலப் பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகளுக்கு ஒடிசா அரசு நிதியுதவி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒடிசாவின் முந்தைய அரசு கடந்த 2033 வரை ஹாக்கி இந்தியாவை ஆதரிப்பதாக உறுதியளித்தது. இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட முதலமைச்சர் மோகன் சரன் மாஜி, இந்திய ஹாக்கி அணியின் ஸ்பானர்ஷிப்பை மேலும் மூன்று ஆண்டுகள் வரை நீட்டித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டேபிள் டென்னிசில் இருந்து ஓய்வா? சூசகமாக அறிவித்த தமிழக வீரர் சரத் கமல்! - Ultimate Table Tennis league