துர்கு: 2024ஆம் ஆண்டுக்கான பாவோ நுர்மி விளையாட்டு தொடர் பின்லாந்து நாட்டின் துர்கு நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஈட்டி எறிதல் விளையாட்டு போட்டியில் இந்திய ஒலிம்பிக் சாம்பியன் நீர்ஜ சோப்ரா கலந்து கொண்டார். அபாரமாக வீசிய நீரஜ் சோப்ரா தனது மூன்றாவது முயற்சியில் 85 புள்ளி 97 மீட்டர் உயரத்திற்கு ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.
முதல் முயற்சியிலேயே 83 புள்ளி 62 மீட்டர் உயரத்திற்கு வீசிய நீரஜ் சோப்ரா தனது மூன்றாவது முயற்சியில் பதக்கத்திற்கான இலக்கை எட்டினார். முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு இதே பாவோ நுர்மி விளையாட்டு தொடரில் கலந்து கொண்ட நீரஜ் சோப்ரா 89.30 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்று இருந்தார்.
இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் களமிறங்கி தங்கப் பதக்கத்தை தன் வசமாக்கி இருந்தாலும் தனது முந்தைய இலக்கை நீரஜ் சோப்ரா எட்டாமல் இருப்பது சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஜெர்மனை சேர்ந்த 19 வயது இளம் வீரர் மேக்ஸ் டெக்னிங் 7வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
இதற்கு முன் ஈட்டி எறிதல் வரலாற்றில் மிக குறைந்த வயதில் 90 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்த வீரர் என்ற சிறப்பை மேக்ஸ் டெக்னிங் தன்வசம் வைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து. ஆனால் பாவோ நுர்மி விளையாட்டு தொடரில் டெக்னிங் 79.84 மீட்டர் தூரம் மட்டுமே ஈட்டி எறிந்து 7வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
உள்ளூர் வீரர் டோனி கெரனன் 84.19 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 2022ஆம் ஆண்டு தங்கம் வென்ற ஆலிவர் ஹெலந்தர் இந்த முறை 83.96 மீட்டர் தூரம் வீசி மூன்றாவது இடம் பிடித்தார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த மாதம் ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ளது.
அதற்கு முன்னதாக சர்வதேச தொடரில் நீரஜ் சோப்ரா பட்டம் வென்று இருப்பது கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் இந்த முறை பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் கடும் போட்டி நிலவக் கூடும் என்பதால் நீரஜ் சோப்ரா 90 மீட்டருக்கு அதிகமான தூரத்திற்கு ஈட்டி எறிந்தால் மட்டுமே பதக்க கனவை உறுதி செய்ய முடியும்.
இதையும் படிங்க: பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் கலக்கப் போகும் தமிழக வீரர் பிருத்விராஜ் தொண்டைமான்! - Olympic Games 2024