புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் கலிங்கா ஸ்டேடியத்தில் 2024ஆம் ஆண்டுக்கான தேசிய பெடரேசன் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில், ஈட்டி எறிதல் விளையாட்டில் கலந்து கொண்ட ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா, 82.27 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து தங்க பதக்கம் வென்றார்.
நான்கு முயற்சிகளில் நீரஜ் சோப்ரா முறாஇயில் 81, 82 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா, கடைசியாக 82.27 மீட்டர் தூரத்திற்கு எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். கடந்த 3 ஆண்டுகளில் இந்திய மண்ணில் நீரஜ் சோப்ரா பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். போட்டியின் தொடக்கத்தில் முன்னிலை பெற கடுமையாக போராடினார்.
3 சுற்றுகளுக்கு பின்னர், 2வது இடம் பிடித்த நீரஜ் சோப்ரா, 4வது முயற்சியில் 82.27 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து, முன்னிலை பெற்றார். போட்டியில் மற்றவர்களை விட தொடர்ந்து முன்னிலை வகித்த நிலையில், இறுதி சுற்றில் நீரஜ் சோப்ரா விளையாடவில்லை. மற்றொரு ஈட்டி எறிதல் வீரர் டி.பி. மானு வெள்ளி பதக்கம் வென்றார்.
டி.பி.மானு அதிகபட்சமாக 82.06 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து வெள்ளி பதக்கம் வென்றார். அவரைத் தொடர்ந்து உத்தம் பாடீல் 78.39 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற கிஷோர் குமார் ஜெனா 5வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட கிஷோர் குமார் ஜெனா, பெட்ரேசன் கோப்பை தொடரில் 80 மீட்டருக்கும் குறைவாகவே ஈட்டி எறிந்து ஏமாற்றம் அளித்தார்.
இதையும் படிங்க: சாம் கரன் அதிரடி.. ராஜஸ்தானை பந்தாடிய பஞ்சாப் கிங்ஸ்! பிளே ஆப் கனவு பலிக்குமா? - IPL2024 RR Vs PBKS Match Highlights