மும்பை : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.7) பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய 20வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பன்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். மும்பை அணியின் இன்னிங்சை முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் ஆகியோர் தொடங்கினர். ஆரம்பம் முதலே அடித்து ஆடிய ரோகித் சர்மா சீரான இடைவெளியில் அணியின் ரன் வேகத்தை உயர்த்தினர்.
6 பவுண்டரி, 3 சிக்சர்கள் விளாசிய ரோகித் சர்மா 49 ரன்கள் குவித்து நூலிழையில் தனது அரை சதத்தை கோட்டைவிட்டார். அக்சர் பட்டேல் பந்துவீச்சில் ரோகித் சர்மா (49 ரன்) க்ளீன் போல்ட்டாகி வெளியேறினார். அடுத்து பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
இதனிடையே மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிஷனுடன், கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா களம் கண்டார். இருவரும் சீரான இடைவெளியில் பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பி அணியின் ரன் வேகத்தை உயர்த்தினர். இஷான் கிஷன் தன் பங்குக்கு 42 ரன்கள் அடித்து கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய திலக் வர்மா நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனிடையே கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யாவும் 39 ரன்கள் குவித்து நடையை கட்டினார். இறுதிக் கட்டத்தில் கூட்டணி அமைத்த டிம் டேவிட் மற்றும் ரோமாரியோ ஷெப்பர்ட் அபாரமாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
அடித்து ஆடிய இருவரும் டெல்லி பந்துவீச்சை சிக்சர்களாக பறக்கவிட்டு குழுமியிருந்த ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தினர். 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியனஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் குவித்தது. டிம் டேவிட் 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் விளாசி 45 ரன்களும், ரோமாரியோ ஷெப்பர்ட் 3 பவுண்டரி 4 சிகசர்கள் என 39 ரன்களும் அடித்து அணி 230 ரன்களை கடக்க உதவினர்.
டெல்லி அணி தரப்பில் அன்ரிச் நோர்ட்ஜ், அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், கலீல் அகமது 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி டெல்லி கேபிட்டல்ஸ் அணி விளையாடி வருகிறது.
இதையும் படிங்க : IPL 2024: டெல்லி அணிக்கு எதிராக ஆயிரம் ரன்கள் குவிப்பு - ரோகித் சர்மா புது சாதனை! - Rohit Sharma 1000 Runs