மும்பை: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும் 33வது ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 நிலை துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசலே வெண்கலம் வென்று நாட்டு பெருமை சேர்த்தார். நடப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முன்றாவது பதக்கம் வென்று தந்த வீரர் என்ற சிறப்பையும் ஸ்வப்னில் குசலே பெற்றார்.
இந்நிலையில் பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசலேவுக்கு 1 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்து உள்ளார். ஸ்வப்னில் குசலேவின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, அரசு எப்போது ஆதரவாகவும், குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் செய்து தரும் என்று தெரிவித்தார்.
Maharashtra CM Eknath Shinde has announced Rs 1 Crore to Olympian Swapnil Kusale for winning Bronze medal in Paris.
— ANI (@ANI) August 1, 2024
ஏறத்தாழ 72 ஆண்டுகளுக்கு பின்னர் ஒலிம்பிக்கில் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ஒருவர் பட்டம் வென்றுள்ளார். 72 ஆண்டுகால மகாராஷ்டிர மாநிலத்தின் தாகத்தை தீர்த்த ஸ்வப்னில் குசலேவை ஈடு செய்யும் வகையில் 1 கோடி ரூபாய் பரிசுத் தொகையை மாநில அரசு அறிவித்துள்ளது.
இதே துப்பாக்கிச் சுடுதலில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மனு பாகெர் மற்றும் கலப்பு அணிகள் பிரிவில் மனு பாகெர் மற்றும் சரப்ஜோதி சிங் ஆகியோர் முறையே இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று தந்துள்ளனர். நடப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த மூன்று வெண்கலப் பதக்கங்களும் துப்பாக்கிச் சுடுதல் மூலம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று தந்த 7வது துப்பாக்கிச் சுடுதல் வீரர் மட்டுமின்றி, 50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சிறப்பையும் ஸ்வப்னில் குசலே பெற்றுள்ளார். மகாரஷ்டிர மாநிலம் கொல்ஹபூர் பகுதியில் வசித்து வருபவர் ஸ்வப்னில் குசலே.
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் பட்டியல்:
ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்: வெள்ளிப் பதக்கம், ஏதென்ஸ் ஒலிம்பிக்ஸ் (2004)
அபினவ் பிந்த்ரா: தங்கப் பதக்கம், பீஜிங் ஒலிம்பிக் (2008)
ககன் நரங்: வெண்கலப் பதக்கம், லண்டன் ஒலிம்பிக்ஸ் (2012)
விஜய் குமார்: வெள்ளிப் பதக்கம், லண்டன் ஒலிம்பிக் (2012)
மனு பாகர்: வெண்கலப் பதக்கம், பாரிஸ் ஒலிம்பிக்ஸ் (2024)
மனு பாகர்-சர்ப்ஜோத் சிங்: வெண்கலப் பதக்கம், பாரிஸ் ஒலிம்பிக்ஸ் (2024)
ஸ்வப்னீல் குசேலே: வெண்கலப் பதக்கம், பாரிஸ் ஒலிம்பிக்ஸ் (2024)
இதையும் படிங்க: தோனியை போல் சாதித்த ஸ்வப்னில் குசலே... இரண்டு பேருக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா? - Paris Olympics 2024