ஐதராபாத்: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மே.8) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 57வது லீக் ஆட்டத்தில் சன்ரைசஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதுவரை 11 போட்டிகளில் விளையாடி உள்ள ஐதராபாத் அணி அதில் 6 வெற்றி, 5 தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அதேபோல், லக்னோ அணி இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
பிளே ஆப் சுற்றுக்குச் செல்ல வேண்டும் என்றால், மீதமுள்ள 3 போட்டிகளிலும் 2ல் போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் உள்ளன. இதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. தெலங்கானா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (மே.7) மழை கொட்டித் தீர்த்தது.
இன்றும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மழையால் ஆட்டம் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் ரசிகர்களிடையே நிலவுகிறது. வருண பகவான் வழிகாட்ட வேண்டும் என ரசிகர்கள் வேண்டிக் கொண்டு உள்ளனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையிலான இன்றிரவு ஆட்டம் கைவிடப்பட்டால், இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பகிர்ந்து கொள்ளும்.
இதையடுத்து, இரு அணிகளும் 13 புள்ளிகளை பெறும். இந்தச் சூழ்நிலையில், ஐபிஎல் 2024 பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற, ஐதராபாத் மற்றும் லக்னோ அணிகள் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அதேநேரம் மழை பெய்யாதபட்சத்தில் வெற்றி வாய்ப்பு இரு அணிகளின் தலையெழுத்தை தீர்மானிக்கும்.
போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல்:
சன்ரைசஸ் ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, சன்வீர் சிங், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், விஜயகாந்த் வியாஸ்காந்த், நடராஜன்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: குயின்டன் டி காக், கே.எல். ராகுல் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, கிருஷ்ணப்ப கவுதம், யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக்.