ஐதராபாத்: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (மே.8) ஐதராபாத்தில் நடைபெற்ற 57வது லீக் ஆட்டத்தில் சன்ரைசஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தன.
அதிகபட்சமாக் நிகோலஸ் பூரன் 48 ரன்களும், ஆயுஷ் பதோனி 55 ரன்களும் சேர்த்தனர். தொடர்ந்து விளையாடிய ஐதராபாத் அணி 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 167 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா (75 ரன்) மற்றும் டிராவிஸ் ஹெட் (89 ரன்) அணிக்கு வெற்றியை தேடித் தந்தனர்.
இந்நிலையில், ஆட்டம் முடிந்ததும் லக்னோ கேப்டன் கே.எல் ராகுலுடன், அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்தில் வைத்து காரசார விவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. வீடியோவில் கேப்டன் கே.எல்.ராகுலிடம் அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கைகளை ஆட்டி சைகை செய்து காரசாரமாக விவாதிக்கிறார்.
இருவருக்கும் இடையே என்ன கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன என்ற தகவல் தெரியவராத நிலையில், இந்திய அணிக்காக விளையாடும் வீரர் ஒருவருடன் காரசாரமாக விவாதம் செய்வது முறையல்ல என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கமென்ட் தெரிவித்து வருகின்றனர். மேலும், எப்படிப்பட்ட பிரச்சினையாக இருப்பினும் அணி நிர்வாகம் அதன் வீரர்களிடம் மூடிய அறையில் விவாதம் செய்வது முறையானது என சமூக வலைதள பயனர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
ஐதரபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் கே.எல் ராகுல் பொறுப்பை உணர்ந்து செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது. 33 பந்துகளை எதிர்கொண்ட ராகுல் அதில் வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுத்தது ரசிகர்களிடையே அதிருபதியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், முதல் பத்து ஓவர்களில் லக்னோ வீரர்கள் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் போனது மோசமான சாதனையாக மாறியது.
இதையும் படிங்க: 2024 புரோ லீக் ஹாக்கி தொடர்: இந்திய அணி அறிவிப்பு! - FIH Pro League Indian Hockey Team