சென்னை: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது. இதில் 133 நாடுகளை சேர்ந்த சுமார் 10500 வீரர், வீராங்கனைகள் 320 போட்டிகளில் 32 பிரிவுகளில் விளையாட உள்ளனர். இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த ஐந்து வீரர்கள் நேரடியாகவும் ஒரு வீரர் மாற்று வீரராகவும் ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றுள்ளனர்.
நேத்ரா குமணன்: சென்னையை சேர்ந்த பாய்மர படகு வீராங்கனையான நேத்ரா குமணன், பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பாய்மர படகு போட்டியில் பங்கேற்கும் 2வது போட்டியாளராக தகுதி பெற்றுள்ளார். பிரான்ஸ் நாட்டின் ஹையரெஸில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கான இறுதி வாய்ப்பில் நேத்ரா குமணன் பங்கேற்று இந்த வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.
வளர்ந்து வரும் நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த பாய்மர படகு போட்டியில் 67 புள்ளிகள் பெற்று டாப் 5-ல் ஒருவராக நேத்ரா தகுதி பெற்றுள்ளார்.மேலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் நேத்ரா குமணன் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடதக்கது. நேத்ரா குமரன் 2020 ஆம் ஆண்டு உலக கோப்பை பாய்மர படகு போட்டியில் வெண்கலம் வென்று சாதனை படைத்திருந்தார். இந்தியா சார்பில் பாய்மரப் படகு போட்டியில் பதக்கம் வென்றிருக்கும் ஒரே பெண் என்கின்ற பெருமையும் இவரிடம் தான் உள்ளது.
ஆரோக்கிய ராஜீவ்: ஆரோக்கியராஜ் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வழுதியூர் கிராமத்தை சேர்ந்தவர். இவர் உதகையில் வெளிங்டன் இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமென்ட்டில் சுபேதாரராக பணிபுரிந்து வருகிறார். சர்வதேச தடகள போட்டிகளில் (4x400மீ) வென்று சாதனை படைத்து வரும் ஆரோக்கிய ராஜீவ், 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டியில் வெண்கலமும், 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டியில் தங்கமும் ஒரு வெள்ளியும் வென்று இருக்கிறார்.
மேலும் 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் மற்றும் 2021 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் பிரிவு மற்றும் கலப்பு என தொடர் ஓட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் உதகை வெலிங்டனில் உள்ள ராணுவ மெட்ராஸ் ரெஜிமென்ட் மைதானத்தின் ஒரு பகுதிக்கு ஆரோக்கிய ராஜீவ் பெயர் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டது. தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் ஆரோக்கிய ராஜூவுக்கு 2017 ஆம் ஆண்டு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.
சுபா வெங்கடேசன்: திருச்சியை சேர்ந்த சுபா வெங்கடேசன் தொடர் ஓட்டபந்தயத்தில் (4x400மீ) தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தார். இவர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுபா வெங்கடேசன் தேசிய அளவில் மற்றும் சர்வதேச அளவில் 20 பதக்கங்களை பெற்றுள்ளார். அதில் 4 பதக்கங்கள் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டு நடைப்பெற்ற உலக தடகள போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார்.
சரத் கமல்: இந்திய டேபிள் டென்னிஸ் வரலாற்றில் அதிக பதக்கங்களை வென்ற டேபிள் டென்னிஸ் வீரர் என்ற பெருமையை சரத் கமல் பெற்றுள்ளார். இவர் காமன்வெல்த் போட்டிகளில் ஏழு தங்கப் பதக்கங்களும், ஆசிய போட்டிகளில் இரண்டு பதக்கங்கள் மற்றும் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டிகளில் இரண்டு முறை பட்டங்கள் பெற்றுள்ளார். மேலும் நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற முதல் டேபிள் டென்னிஸ் வீரர் என்ற பெருமையும் பெற்று இருக்கிறார். 2004 ஆம் ஆண்டு அர்ஜூனா விருதும், 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் விளையாட்டுத்துறைக்கான மிக உயரிய விருதான கேல்ரத்னா விருதும் இவருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்திவிராஜ் தொண்டைமான்: புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பிரித்விராஜ் தொண்டைமான் இந்திய அணி சார்பில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் துப்பாக்கி சுடுதல் குழுவிற்கு தலைமை தாங்குகிறார். இவர் 2022 ஆம் ஆண்டு சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்றார்.
அதன்பின் 2023 ஆம் ஆண்டு தோகாவில் நடைபெற்ற ஷார்ட் கட் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஷார்ட் கட் பிரிவில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற பெருமையும் பெற்றிருக்கிறார். அனுபவம் வாய்ந்த வீரர் என்பதால் நிச்சயம் பதக்கங்களை வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி.சத்தியன் ஞானசேகரன்: இந்தியாவின் சார்பில் பாரிஸ் ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் பிரிவில் மாற்று வீரராக சென்னையை சேர்ந்த சத்திய ஞானசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். நடுத்தர குடும்பத்தில் பிறந்திருந்தாலும் டேபிள் டென்னிசில் பல சாதனைகளை படைத்து வருகிறார்.
டேபிள் டென்னிஸ் சர்வதேச தரவரிசையில் 25 வது இடத்தை பெற்று இருக்கிறார். இதுவரை இந்திய வீரர்கள் யாரும் இந்த இடத்தை பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது. இதுவரை காமன்வெல்த் போட்டிகளில் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, இரண்டு வெண்கல பதக்கங்களும், ஆசிய போட்டிகளில் மூன்று பதக்கங்களும், தெற்காசிய போட்டியில் நான்கு பதக்கங்கள் வென்று சாதனை படைத்திருக்கிறார்.
கடந்த 2018ஆம் ஆண்டு அர்ஜுனா விருது பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். பாரீஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் அணியின் வீரர்களை ஏதேனும் மாற்ற வேண்டிய சூழல் வந்தால் மாற்று வீரராக சத்யன் ஞானசேகர் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 20 ஓவர் உலக கோப்பை சூப்பர் 8: டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு! தாக்கு பிடிக்குமா ஆப்கான்?