அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான குவாலிஃபயர் (Qualifier 1) முதலாவது போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் ஓவரிலேயே ஹைதராபாத் அணிக்கு ஸ்டார்க் மிகப்பெரும் அதிர்ச்சி கொடுத்தார்.
ஸ்டார்க்கின் அனல் பறக்கும் பந்து வீச்சில் ஹெட் ரன் எடுக்காமல் போல்டானார். 2வது ஓவரில் ரஸ்ஸலின் அசத்தலான கேட்ச்சில் அபிஷேக் சர்மா 3 ரனக்ளுக்கு அவுட்டானார். அடுத்து களமிறங்கிய நிதிஷ் குமார் ரெட்டி 9 ரன்களுக்கு அவுட்டாக, பின்னர் வந்த ஷாபாஸ் அகமது டக் அவுட்டானார். ஸ்டார்க்கின் பந்து வீச்சில் அனல் பறந்தது. 39 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்த நிலையில் ஹைதராபாத் பேட்ஸ்மென்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
பின்னர் திரிபாதி, கிளாசென் ஜோடி சிக்சர், பவுண்டரிகளாக அடித்து ரன்கள் குவிந்தது. கிளாசென் 32 ரன்கள் எடுத்த நிலையில் சக்ரவர்த்தி பந்தில் அவுட்டானார். இதனைத்தொடர்ந்து ரஸ்ஸலின் அசத்தலான ஃபில்டிங்கில் திரிபாதி 55 ரன்களுக்கு ரன் அவுட்டானார். வந்த வேகத்தில் அதிரடி காட்டிய சமாத் 16 ரன்களுக்கு ராணா பந்தில் அவுட்டானார்.
கடைசி சில ஓவர்களில் பொறுப்புடன் ஆடிய கேப்டன் கம்மின்ஸ் 30 ரன்கள் எடுக்க, ஹைதராபாத் அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. எளிதான இலக்கை விரட்டிய கொல்கத்தா அணிக்கு குர்பாஸ், சுனில் நரைன் ஆகியோர் அதிரடி தொடக்கத்தை வழங்கினர். கம்மின்ஸ், புவனேஷ்வர் ஓவர்களில் பவுண்டரி, சிக்சர்களாக பறந்தது. 3வது ஓவரை வீசிய நடராஜன், குர்பாஸ் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வீழ்த்தினார்.
நரைன் 21 ரன்களுக்கு கம்மின்ஸ் பந்தில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஆரம்பத்தில் பொறுமையாக ஆடினாலும், பின்னர் அதிரடியாக ஆடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். கடைசியில் வெங்கடேஷ் ஐயர் 51, ஸ்ரேயாஸ் ஐயர் 58 ரன்களுக்கு அவுட்டாகாமல் இருந்தனர். இந்த போட்டியின் வென்றதன் மூலம் கொல்கத்தா அணி இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது. இன்றைய ராஜஸ்தான், பெங்களூரு எலிமினேட்டர் (Eliminator) போட்டியில் வெற்றி பெறும் அணி இரண்டாவது குவாலிஃபயர் (qualifier 2)போட்டியில் ஹைதராபாத் அணியுடன் மோதும்.
இதையும் படிங்க: ஐபிஎல் தொடரில் எந்த அணி வெற்றி பெற்றாலும் தமிழருக்கு பெருமை தான்.. எப்படி தெரியுமா? - TAMILNADU CRICKETERS IN IPL