கொல்கத்தா: 17வது ஐபிஎல் தொடரில் 3வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகிறது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி, பவுலிங் தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் சால்ட் ஆரம்பம் முதலே சிக்சர்களாக பறக்கவிட்டார். 2வது ஓவரில் ஜான்சென் பந்தில் சால்ட் மூன்று சிக்சர்கள் அடித்த நிலையில், மறுமுனையில் சுனில் நரைன், சபாஷின் ரன் அவுட்டில் 2 ரன்களுக்கு நடையைக் கட்டினார். அதிரடியாக விளையாடிய சால்ட் 54 ரன்களில் அவுட்டானார்.
பின்னர் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர், நடராஜன் பந்தில் 7 ரன்களுக்கு அவுட்டானார். அதே ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயரும் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் களமிறங்கிய நிதிஷ் ராணா 1 ரன்னில் கண்டம் தப்பிய நிலையில், 9 ரன்களில் மார்கண்டே மந்தில் அவுட்டானார். கொல்கத்தா அணி 51 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது.
பின்னர் களமிறங்கிய ரமண்தீப் சிங் - ரிங்கு சிங் ஜோடி, அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. ரமண்தீப் சிங் 35 ரன்கள் சேர்த்த நிலையில், ஹைதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பந்தில் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய ரஸல், ஹைதராபாத் பந்து வீச்சை நாலாபக்கமும் சிதறடித்தார். ரிங்கு சிங் 23 ரன்களுக்கு அவுட்டானார்.
ரஸல் 25 பந்துகளுக்கு 64 ரன்கள் எடுத்தார். ரஸல் 7 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் அடித்தார். கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 208 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் அணி சார்பில் நடராஜன் அதிகபட்சமாக 3 விக்கெட் எடுத்தார். இமாலய இலக்கை விரட்டும் ஹைதராபாத் அணி 1 ஓவருக்கு 12 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இதையும் படிங்க: சாம் கரண், லிவிங்ஸ்டன் அதிரடியில் பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி! - PBKS Vs DC