பெங்களூரு: 17வது ஐபிஎல் தொடரின் 10வது லீக் போட்டியில், இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகிறது. பெங்களூருவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு செய்தது. ஸ்டார்க் வீசிய முதல் பந்திலேயே கோலி பேட் முனையில்பட்டு பவுண்டரி சென்றது.
பின்னர், ஹர்ஷித் ராணா பந்தில் சிக்ஸ் அடித்த டூ பிளசிஸ், அவரது அடுத்த பந்தில் 8 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர், கோலி க்ரீன் ஜோடி அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தது. நரைன், ராணா பந்துகளை இருவரும் பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர். இந்நிலையில், ரஸல் வீசிய ஃபுல் டாஸில் சிக்ஸ் அடித்த க்ரீன் அவரது அடுத்த பந்தில் 33 ரன்களுக்கு போல்டானார்.
அடுத்து வந்த மேக்ஸ்வெல் தன் பங்கிற்கு சக்ரவர்த்தி பந்தில் பவுண்டரிகளாக விளாசினார். ஹர்ஷித் ராணா பந்தில் ரமந்தீப், மேக்ஸ்வெல் கொடுத்த எளிதான கேட்ச்சை தவறவிட்டார். கண்டம் தப்பிய மேக்ஸ்வெல், நரைன் பந்தில் ரிங்கு சிங்கிடம் கேட்ச் கொடுத்து 28 ரன்களுக்கு அவுட்டானார். ஒரு பக்கம் விக்கெட் விழ, மறுபக்கம் விராட் கோலி பொறுமையாக ரன்கள் சேர்த்து வந்தார். பின்னர் களமிறங்கிய ராவத் 3 ரன்களுக்கு அவுட்டாக, ஆர்சிபி அணியின் நம்பிக்கை நாயகன் தினேஷ் கார்த்திக் வந்தார்.
வந்த வேகத்தில் சிக்ஸர்களாக அடித்த கார்த்திக், 8 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். இறுதியில், ஆர்சிபி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 59 பந்துகளுக்கு 83 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். கடினமான இலக்கை விரட்ட களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சால்ட், நரைன் ஆகியோர், சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே 18 ரன்கள் குவித்தனர்.
அடுத்து ஜோசப் ஓவரில் சிக்சர்களாக பறக்கவிட்டனர். கொல்கத்தா அணி 21 பந்துகளில் 50 ரன்களைக் கடந்தது. இதனையடுத்து, யாஷ் தயால் பதுவீச்சை நரைன் பதம் பார்த்தார். 22 பந்துகளில் 47 ரன்கள் அடித்த நரைன், மயாங்க் தாகர் பந்தில் போல்டானார். இதனையடுத்து கொல்கத்தா அணி 9 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 104 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இதையும் படிங்க: ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த டேவிட் வார்னர்! - David Warner IPL Records