கரூர்: கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில், இரண்டாவது அகில இந்திய அளவிலான பெண்கள் கூடைப்பந்து போட்டி, கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி 5 நாட்களாக லீக் மற்றும் நாக்கவுட் முறையில் நடைபெற்றது.
இப்போட்டியில், அகில இந்திய அளவில் தேர்வான கேரள மின்வாரிய அணி, சென்னை வருமான வரித்துறை அணி, குவாலியர் ஐடிஎம் பல்கலைக்கழகம் அணி (ITM University Gwalior), சென்ட்ரல் ரயில்வே மும்பை அணி (CR railway, Mumbai), சவுத் சென்ட்ரல் ரயில்வே செகந்திராபாத் அணி (South Central Railway, Secunderabad), இந்துஸ்தான் பல்கலைக்கழகம், சென்னை அணி (Hindustan University, Chennai) உள்ளிட்ட 12 அணிகள் கலந்து கொண்டனர்.
இதில், கால் இறுதி போட்டியில் முன்னேறி, அரையிறுதி போட்டியில், ரைசிங் ஸ்டார் சென்னை அணியும், கேரளா மின்சார வாரியம் அணியும் மோதியது. இதில், கேரளா மின்சார வாரியம் அணி, 72-49 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதேபோன்று, ஈஸ்டன் ரயில்வே கொல்கத்தா அணியுடன், சவுத் சென்ட்ரல் ரயில்வே செகந்திராபாத் அணி மோதியதில், ஈஸ்டன் ரயில்வே கொல்கத்தா அணி 87-82 புள்ளிகள் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இதையும் படிங்க: "ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவது கண்டனத்திற்குரியது" - அமைச்சர் சிவசங்கர்!
இந்நிலையில், நேற்று (பிப்.11) நடைபெற்ற இறுதிப் போட்டியில், கேரள மின்வாரிய அணியும், ஈஸ்டன் ரயில்வே கொல்கத்தா அணியும் மோதியது. இதில், கேரள மின்வாரிய அணி 86-59 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. 2-வது இடத்தை ஈஸ்டன் ரயில்வே கொல்கத்தா அணியும், 3-வது இடத்தை சவுத் சென்ட்ரல் ரயில்வே அணியும், 4-வது இடத்தை ரைசிங் ஸ்டார் சென்னை அணியும் பிடித்தது.
இதையடுத்து, போட்டியில் வெற்றி பெற்று முதல் இடம் பிடித்த கேரள மின்வாரிய அணிக்கு, பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் சுழல் கோப்பையை, கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மக்களவை உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தனர். இதேபோன்று, மூன்றாவது மற்றும் நான்காவது இடம் பிடித்த, சவுத் சென்ட்ரல் ரயில்வே அணி மற்றும் ரைசிங் ஸ்டார் சென்னை அணிக்கு, சுழல் கோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
மேலும், ஐந்து நாள் நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடிய கூடைப்பந்து வீரருக்கு, சிறப்பு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நேற்று, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், இறுதிப் போட்டியைக் காண சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை புரிந்துள்ளனர்.
இதையும் படிங்க: இலங்கையில் ஐஐடி கிளை துவக்கம்? ஐஐடி மெட்ராஸ் கிளை தொடங்க உள்ளதாக தகவல்!