பெங்களூரு: இந்திய பேட்மிண்டன் ஜாம்பவான் ரோஹன் போபண்ணா ஆஸ்திரேலியா ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவில் பங்கேற்று கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்றார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரோஹன் போபண்ணாவை கௌரவிக்கும் வகையில் அவருக்கு 50 லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் எனக் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
ரோஹன் போபண்ணா கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றதற்கு அவரை நேரில் சந்தித்து முதலமைச்சர் சித்தராமையா வாழ்த்து கூறினார். அப்போது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ப்ரியங்க் கார்கே, அமைச்சர் சிவ்ராஜ் தங்கதாகி மற்றும் பலர் உடனிருந்தனர். இதுகுறித்து முதலமைச்சர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில், "ஆஸ்திரேலியா ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ள ரோஹன் போபண்ணாவை சந்தித்து வாழ்த்து கூறினேன்.
அவரை கௌரவிக்கும் வகையில் 50 லட்ச ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளேன்" என பதிவிட்டு உள்ளார். முன்னதாக ஆஸ்திரேலியா ஓபன் வென்ற பிறகு ரோஹன் போபண்ணா டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். ரோஹன் போபண்ணா ஆடவர் இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் வென்ற மூன்றாவது இந்திய வீரர் ஆவார்.
சமீபத்தில் மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில் சைமன் பொலேல்லி மற்றும் ஆண்ட்ரியா வாவசோரி ஆகியோரை தோற்கடித்து ரோஹன் போபண்ணா மற்றும் மேத்யூ எப்டன் ஜோடி பட்டம் வென்றது. இந்திய பிரபல டென்னிஸ் வீரர்கள் லியாண்டர் பயஸ் மற்றும் மகேஷ் பூபதி மட்டுமே ஆடவர் இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளனர்.
அதேபோல் பெண்கள் பிரிவில் சானியா மிர்சா கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதித்துள்ளார். 2017 பிரெஞ்சு ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவிற்கு பிறகு ரோஹன் போபண்ணா வெல்லும் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். மேலும் ஆஸ்திரேலிய ஓபனில் வென்றதன் மூலம் அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் ரோஹன் போபண்ணா. தற்போது ரோஹன் போபண்ணா இந்த ஆண்டு பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் சாதிக்க பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க: பயணிக்கு நட், போல்ட் விழுந்த சான்ட்விச்: இண்டிகோ வழங்கியதா? என்ன நடந்தது?