மும்பை: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள 13 நகரங்களில் நடைபெற்ற லீக் மற்றும் பிளே சுற்று ஆட்டங்களின் முடிவில் சன்ரைசஸ் ஐதரபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் கடந்த மே 26ஆம் தேதி நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சன்ரைசஸ் ஐதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதில் முதலில் விளையாடிய ஐதராபாத் அணி 18 புள்ளி 3 ஓவர்கள் முடிவில் 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10 புள்ளி 3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பும் உரிமையை ஜியோ சினிமா நிறுவனம் கைப்பற்றி இருந்தது.
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனை ஒட்டுமொத்தமாக 62 கோடி பார்த்து சாதனை படைத்துள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், நடப்பு ஐபிஎல் சீசனில் 2 ஆயிரத்து 600 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது. இது கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனை காட்டிலும் 53 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் நாள் ஆட்டம் 11 கோடியே 3 லட்சம் பார்வைகளை கடந்துள்ளதாகவும், கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனை காட்டிலும் 51 சதவீதம் அதிகம் என்றும் ஜியோ சினிமா நிறுவனம் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் தளம் மூலம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஐபிஎல் கிரிக்கெட் சீசனை ஒளிபரப்பி வரும் ஜியோ சினிமா நிறுவனம், நடப்பு சீசனில் தொடக்க நாள் ஆட்டம் மட்டும் 59 கோடி பார்வைகளை பதிவு செய்துள்ளதாகவும், 660 கோடி நிமிடங்கள் பார்வையாளர்கள் வீடியோக்களை கண்டு களித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: "விகே பாண்டியன் எனது அரசியல் வாரிசு அல்ல"- ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்! - VK Pandian