ஐதராபாத்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக தற்போது கிரெக் பார்க்லே உள்ளார். அவரது பதவிக் காலம் வரும் நவம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. ஏற்கனவே அவரது பதவிக் காலம் நிறைவு பெற்று இரண்டு ஆண்டுகள் மீண்டும் நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், கிரெக் பார்க்கலே மூன்றாவது முறையாக ஐசிசி தலைவராக இருக்க விரும்பவில்லை என ஐசிசி இயக்குநர்கள் கூட்டத்தில் தெரிவித்து உள்ளார்.
வரும் நவம்பர் மாதத்துடன் அவரது பதவிக் காலம் நிறைவு பெற உள்ள நிலையில், புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் ஐசிசி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தாம் ஐசிசியின் புதிய தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
ஐசிசியின் தலைவராக ஜெய்ஷாவை நியமிக்க ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் ஆதரவுக் கரம் நீட்டியுள்ள நிலையில், விரைவில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அதேநேரம், ஐசிசியின் தலைவராக ஜெய்ஷா தேர்வு செய்யப்படுவதற்கு மற்ற கிரிக்கெட் வாரியங்களின் ஆதரவும் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் இந்தியாவில் இருந்து இரண்டு பேர் ஐசிசியின் தலைவர்களாக பதவி வகித்து உள்ளார். கடந்த 1997 முதல் 2000 வரை ஜெகமோகன் டால்மியா மற்றும் 2010 முதல் 2012 வரை தற்போதைய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் ஐசிசியின் தலைவர்களாக பதவி வகித்து உள்ளனர்.
இந்நிலையில், ஐசிசியின் புதிய தலைவராக ஜெய்ஷா தேர்வு செய்யப்படும் பட்சத்தில் கிரிக்கெட் அதிகார அமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்படும் மூன்றாவது இந்தியர் என்ற சிறப்பை பெறுவார். தலைவர் பதவிக்கான வேட்புமணு ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்படும் பட்சத்தில் தேர்தல் நடத்தப்படும் என்றும் ஒரேயொரு வேட்புமனு மட்டும் தாக்கல் செய்யப்படும் நிலையில், அவரே ஒருமனதாக தலைவர் பொறுப்பை ஏற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்படும் நிலையில், வரும் டிசம்பர் 1ஆம் தேதி ஐசிசியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அதன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மொத்தம் 16 பேர் ஐசிசியின் இயக்குநர் பொறுப்புகளில் உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுபர் அதில் 51 சதவீதம் அதாவது 9 வாக்குகளை பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பிசிசிஐ செயலாளராக இருக்கும் ஜெய்ஷாவின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை உள்ளது. உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிசிசிஐ சட்ட விதிகளின்படி, பொறுப்பாளர் பதவிகளில் இருப்பவர் ஏறத்தாழ 6 ஆண்டுகள் வரை ஒரு பதவியில் அதேநேரம் அவர் இடைப்பட்ட காலத்தில் 3 ஆண்டுகள் பதவியில் இருக்கக் கூடாது. அதேபோல் இந்த விதிமுறைகளின் படி ஒருவர் அதிகபட்சமாக 18 ஆண்டுகள் வரை பொறுப்பில் இருக்க முடியும்.
ஐசிசியின் தலைவராக ஜெய்ஷா தேர்வு செய்யப்படும் நிலையில் மிக இளம் வயதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட முதல் நபர் என்ற சிறப்பை பெறுவார்.
இதையும் படிங்க: "மு.க.ஸ்டாலினை தெரியாது.. விஜயை நல்லா தெரியும்.."- துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர்! - Manu Bhaker