லக்னோ: ஐபிஎல் தொடரின் 34வது போட்டி இன்று லக்னோ ஏகனா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 5வது இடத்தில் இருக்கும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் மோதி வருகிறது.
இதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ரஹானே மற்றும் ரச்சின் ரவீந்திரா களம் இறக்கப்பட்ட நிலையில், மொஹ்சின் கான் வீசிய முதல் பந்திலேயே ரச்சின் போல்ட் ஆகி வெளியேறினார்.
இதனால் எந்த ரன்னும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். அதன்பின் ருதுராஜ் 17 ரன்களில் யாஷ் தாக்கூர் பந்து வீச்சில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, பின்னர் ஜடேஜா - ரஹானே கூட்டணி சிறிது நேரம் நீடித்தது. 35 ரன்கள் சேர்த்த கூட்டணி க்ருணால் பாண்டியா பந்து வீச்சில் பிரிந்தது.
ரஹானே போல்ட் ஆகி 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் சிவம் துபே 3, ரிஷ்வி 1 என அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து, மொயின் அலி அதிரடியாக 3 சிக்சர்கள் உட்பட 30 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் ஜடேஜா சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினார். கடைசியாக எம்.எஸ். தோனி 2 சிக்சர்கள், 3 ஃபோர்கள் என 9 பந்துகளில் 28 ரன்கள் அடித்து அணிக்கு ரன்களை உயர்த்தினார்.
20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 176 ரன்கள் சேர்த்துள்ளது. லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக க்ருனால் பாண்டியா 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து, லக்னோ அணி 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி விளையாடி வருகிறது.
இதையும் படிங்க: ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைய என்ன காரணம்? ஆய்வுகள் கூறும் அதிர்ச்சித் தகவல்.! - What Causes Low Sperm Count In Men