ஜெய்ப்பூர்: இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட், டெல்லி கேபிடல்ஸ் அணியால் கடந்த 2016ஆம் ஆண்டு 1.90 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அதன்பின், விளையாட்டின் மீது கொண்ட ஆர்வமும், அவரது சிறந்த செயல்பாடும் 2021ஆம் ஆண்டில் இருந்து அணியை வழிநடத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
ஐபிஎல் தொடர்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 2017ஆம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும், 2018ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் அறிமுகமானார். சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி, அணியில் நிரந்தர இடத்தை தனதாக்கும் வேளையில், சாலை விபத்தில் சிக்கி கடந்த ஓராண்டு காலமாக எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார்.
தற்போது, இந்த ஐபிஎல் தொடரின் மூலம் கிரிக்கெட் களத்திற்கு மீண்டும் அவர் திரும்பி உள்ளார். இந்த நிலையில், இன்று (மார்ச் 28) ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டு விளையாடுவதன் மூலம், அவர் டெல்லி அணிக்காக 100வது போட்டியில் விளையாடுகிறார்.
இதன் மூலம் அவர் டெல்லி அணிக்காக 100வது போட்டியில் விளையாடும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். முன்னதாக சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஷ்ரா விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் மொத்தமாக 103 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
26 வயதாகும் ரிஷப் பண்ட், இதுவரை விளையாடிய ஐபிஎல் போட்டிகளில் 1 சதம் மற்றும் 15 அரைசதங்கள் உட்பட மொத்தம் 2,856 ரன்கள் குவித்து 147.90 ஸ்ட்ரைக் ரேட் உடன் 34.40 சராசரியைக் கொண்டுள்ளார். அணியின் கேப்டனாக 16 போட்டிகளில் வெற்றியும், 14 போட்டிகளில் தோல்வியும் 1 போட்டி டிராவிலும் முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மும்பை அணியை பந்தாடிய ஹைதராபாத் அணி.. ஒரே போட்டியில் பல சாதனைகள் நிகழ்த்தி அசத்தல்! - SRH Vs MI Highlights