சென்னை: மார்ச் 22ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) துவங்கிய 17ஆவது ஐபிஎல் (Indian Premier League) கிரிக்கெட் தொடர் மே 26ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. நடப்பு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.
முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (CSK) - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை (RCB) எதிர்கொண்டது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து சிஎஸ்கே தனது அடுத்த போட்டியில் இன்று குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை எதிர்கொள்கிறது. இதற்காக சிஎஸ்கே, குஜராத் டைட்டன்ஸ் இரு அணி வீரர்களும் நேற்று (திங்கட்கிழமை) தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
மேலும், சென்னை அணிக்குத் திரும்பியுள்ள மதீஷா பத்திரனா முழு உடல் தகுதியுடன் உள்ளதால் இன்றைய போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி என இரு அணிகள் இளம் கேப்டன்கள் தலைமையிலான அணியாகக் களம் காண்கிறது.
கடந்த ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் மோதிய இரு அணிகளும் மோதிக்கொள்வதால் இன்றைய ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அணியின் துவக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கையளிக்கும் வகையில் முதல் போட்டியில் விளையாடிய நிலையில் ரகானே, மிட்செல், சிவம் துபே, ஜடேஜா ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை அளித்தனர்.
கடந்த போட்டியில் பேட்டிங் செய்யாத தோனி இன்றைய ஆட்டத்தில் களமிறங்க வேண்டும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பந்து வீச்சில் கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய முஸ்தஃபிசுர், காயத்திலிருந்து மீண்டு பத்திரனா சென்னை அணியில் இணைந்துள்ள நிலையில் சென்னை அணிக்குக் கூடுதல் பலத்தைச் சேர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், சென்னை அணி உள்ளூர் மைதானத்தில் விளையாடும் போது வலுவான அணியாக உள்ள நிலையில், குஜராத் அணியின் சாய் சுதர்சன், சாய் கிஷோர், விஜய் சங்கர், ஷாருக்கான் போன்ற தமிழ்நாடு வீரர்கள் இடம்பெற்றுள்ளதால் இன்றைய போட்டி சென்னை அணிக்குச் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சுப்மன் கில், டேவிட் மில்லர், ரசித் கான் போன்ற வீரர்கள் குஜராத் அணிக்குக் கூடுதல் பலம் சேர்க்கும் நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
பயிற்சிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், "சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், பந்து வீச்சுக்குத் தேவைப்படும் போது ரச்சின் ரவீந்திராவை பயன்படுத்துவோம் எனவும் கூறினார்.