கொல்கத்தா: 17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 42வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர் கொண்டது.
ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் கொல்கத்தா அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர்.
பஞ்சாப் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்த இந்த கூட்டணி முதல் விக்கெட் இழப்பிற்கு 138 ரன்களை குவித்தது. இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நரேன் 31 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் அவுட் ஆனார்.
அவரைத்தொடர்ந்து 37 பந்துகளில் 75 ரன்கள் விளாசிய சால்ட் அவுட் ஆனார். இதன் பின்னர் களமிறங்கிய வெங்கடேஷ்(39), ஸ்ரேயாஸ் (28), ஆன்ட்ரே ரசல் (24) விளாச 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்தது, கொல்கத்தா அணி.
இதன் பின்னர், 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக பிரப்சிம்ரன் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் களமிறங்கினர். இமலாய இலக்கை சேஸ் செய்ய வேண்டும் என்பதால் ஆரம்பம் முதலே அடித்து ஆட தொடங்கியது, இந்த கூட்டணி.
இதில், 20 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து இருந்த பிரப்சிம்ரன் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ரோசவ் 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதன் பின்னர், களமிறங்கிய ஷஷாங்க் உடன் ஜோடி சேர்ந்த ஜானி பேர்ஸ்டோ அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இருவரும் இணைந்து கொல்கத்தா அணியின் பந்து வீச்சைப் பொளந்து கட்டினர். இதில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ஜானி பேர்ஸ்டோ சதம் விளாசினார். மறுபுறம் அபாரமாக விளையாடிய ஷஷாங்க் அரைசதம் விளாசினார்.
இதனால், 18.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டிய பஞ்சாப் கிங்ஸ், 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. ஜானி பேர்ஸ்டோ 108 ரன்களுடனும், ஷஷாங்க் 68 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் மட்டுமின்றி டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி சேஸ் செய்த அதிகபட்ச ரன்கள் என்ற வரலாற்று சாதனையை பஞ்சாப் படைத்துள்ளது. அதேபோல், இந்த போட்டியில் இரு அணிகளும் சேர்த்து மொத்தமாக 42 சிக்ஸர்கள் விளாசியுள்ளனர். இதுதான் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட போட்டியாகும்.
இதையும் படிங்க:"உலக செஸ் சாம்பியன் தொடருக்கான பயிற்சி எப்போது?" - கிராண்ட்மாஸ்டர் குகேஷ் பேட்டி!