லக்னோ: 17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 34வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர் கொண்டது.
லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. இதில், பொறுப்புடன் விளையாடிய ஜடேஜா 40 பந்துகளில் 5 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர்கள் என 57 ரன்களை குவித்தார்.
ரஹானே 36 ரன்களும், ஆட்டத்தின் இறுதியில் களமிறங்கி அதிரடி காட்டிய தோனி 9 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 28 ரன்களும் குவித்தார். லக்னோ அணி தரப்பில் குர்னால் பாண்டியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியினர் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். லக்னோ அணியின் இன்னிங்ஸை குயிண்டன் டிகாக் மற்றும் கேப்டன் கே.எல்.ராகுல் தொடங்கினர்.
இவர்கள் இருவரும் சென்னை அணியின் பந்துவீச்சினை சிறப்பாக கையாண்டு அணிக்கு ரன்கள் சேர்த்தனர். போட்டியின் நடுவே குயிண்டன் டிகாக் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சிஎஸ்கே தவறவிட்டது. இதனால், இந்த கூட்டணி 134 ரன்கள் சேர்த்தது.
இதில் சிறப்பாக விளையாடி வந்த டி காக், 54 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் முஸ்தபிசூர் வீசிய பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய கேஎல் ராகுல் 82 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் 19 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்.
இதையும் படிங்க: சென்னை Vs லக்னோ; நாளை மறுநாள் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது!