முல்லாப்பூர்: 17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 33வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியானது பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் உள்ள மகாராஜா யாத்வேந்திர சிங் கிரிக்கெட் மைதானத்தில் இன்று(வியாழக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. பஞ்சாப் அணியின் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான ஷிகர் தவான் தோள்பட்டை காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார்.
அவர் முழு உடல் தகுதியை எட்ட இன்னும் சில நாள்கள் ஆகும் என்பதால் இன்றைய போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகமே, இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகும். இதனால் இன்றைய போட்டியில் கேப்டன் பொறுப்பை சாம் கரன் கவனிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் கிங்ஸ் இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 4 போட்டிகளில் தோல்வியும், 2 போட்டிகளில் வெற்றியும் பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் கடைசி கட்டத்தில் ஷசாங்க் சிங், அஷூதோஷ் ஷர்மா நல்ல ஃபார்மில் உள்ளனர்.
ஆனால் பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் ஷர்மா போதிய அளவு பங்களிப்பை அளிக்க முடியாமல் தடுமாறுகின்றனர். அதே போல் ஆல்-ரவுண்டர்கள் சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் நல்ல ஃபார்மில் இல்லாதது அந்த அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், ரபடா, ஹர்ஷல் பட்டேல் வலுசேர்க்கிறார்கள்.
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு சீசனில் தடுமாறி வருகிறது. இந்த சீசனின் தொடக்கத்தில் முதல் 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்த (குஜராத், ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளுக்கு) எதிராக அந்த அணி அடுத்த 2 போட்டிகளில் (டெல்லி, பெங்களூரு அணிகளுக்கு எதிராக) வெற்றி பெற்றது.
இதனால் பழைய ஃபார்முக்கு மும்பை திரும்பிவிட்டது?என எண்ணுவதற்குள் அதன் செந்த மைதானத்தில் சென்னை அணியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அந்த அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கும் ரோகித் சர்மா- இஷான் கிஷன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆனால் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வரும் சூர்யகுமார் யாதவ் இன்னும் முழுமையாக ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பந்து வீச்சை பொறுத்தவரையில் ஜஸ்பிரித் பும்ராவையே அந்த அணி அதிகம் நம்பி உள்ளனர். இதனால் ஜெரால்டு கோட்ஜீ, ஆகாஷ் மத்வால் உள்ளிட்ட பவுலர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீச வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இரண்டு அணிகளும் இதுவரை 31 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் 16 முறை மும்பை அணியும், 15 முறை பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு அணிகளும் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற வேண்டும் என்றால் இனி வரவிருக்கும் போட்டிகளில் பொறுப்புடன் விளையாடி வெற்றி பெற வேண்டும் என்பதால் இரண்டு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெற கடுமையாகப் போராடும் என்பதில் சந்தேகமில்லை.
இதையும் படிங்க: சொந்த மண்ணில் சொதப்பிய குஜராத் டைட்டன்ஸ்… டெல்லி கேபிடல்ஸ் அபார வெற்றி! - IPL 2024