முல்லாப்பூர்: 17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 33வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர் கொண்டது.
பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் உள்ள மகாராஜா யாத்வேந்திர சிங் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) இரவு நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. அபாரமாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 53 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார், ரோகித் சர்மா 36 ரன்களும், திலக் வர்மா 34 ரன்களும் குவித்தனர்.
பஞ்சாப் அணி தரப்பில் சாம் கரன் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது.
அதாவது கோட்ஸி மற்றும் பும்ராவின் அபார பந்துவீச்சால் போட்டியின் 2.1 ஓவர்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பிரப்சிம்ரன் சிங், ரூசோவ், சாம் கரன் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் விரைந்து விக்கெட்டை இழந்தனர்.
இதன் பின்னர் களமிறங்மிய ஹர்ப்ரீத் சிங் 13 ரன்களுக்கும், ஜிதேஷ் சர்மா 9 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் 77 ரன்களுக்கு 6 விக்கெட்டிகளை இழந்தது பஞ்சாப். அதன் பின்னர் ஷஷாங்க் சிங்குடன் கைகோர்த்த அஷுதோஷ் சர்மா அதிரடியாக பவுண்டரிகளை விளாசிவந்தார்.
இவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். அணியின் ஸ்கோர் 111 ரன்கள் இருந்த போது ஷஷாங்க் சிங் 41 ரன்களுக்கு தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இதன் பிறகு அஷுதோஷ் சர்மா மட்டுமே பஞ்சாப் அணியின் நம்பிக்கையாக இருந்தார்.
அதற்கு ஏற்றது போல் அணியின் வெற்றிக்காக இறுதிவரை போரடிய அஷுதோஷ் 28 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் என 61 ரன்களுக்கு விக்கெட் இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் 19.1 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் குவித்தது பஞ்சாப் கிங்ஸ். இதனால் 9 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது மும்பை இந்தியனஸ். அபாரமாக பந்து வீசிய கோட்ஸி மற்றும் பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையும் படிங்க: வான்கடே மைதானத்தில் மாயாஜாலம் செய்த தோனி.. புதிய சாதனைக்கு கேக் வெட்டி கொண்டாட்டம்!