பெங்களூரு: ஐபிஎல் தொடரின் 52வது லீக் ஆட்டம் தற்போது பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், 8வது இடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதி வருகின்றன.
டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்தது. ஆனால், குஜராத் அணிக்கு தொடக்கம் மிகவும் மோசமாக அமைந்தது. அடுத்தடுத்து மூன்று விக்கெட்களை பறிகொடுத்தது.
விருந்தமன் சகா 1, கேப்டன் சுப்மன் கில் 2, சாய் சுதர்சன் 6 ரன்கள் என தொடக்க வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனையடுத்து கைகோர்த்த சாரூக் கான் - டேவிட் மில்லர் கூட்டணி சரிவில் இருந்த குஜராத் அணியை மீட்டனர். 2 சிக்சர்கள், 3 ஃபோர்கள் அடித்த மில்லர் எதிர்பாராத விதமாக கரன் சர்மா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சாரூக் கான் ரன் அவுட் ஆனார். 37 ரன்கள் அடித்த அவரை விராட் கோலி ரன் அவுட் செய்தார். பின்னர் ராகுல் டெவாடியா 35, ரஷித் கான் 18, விஜய் சங்கர் 10 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, குஜராத் அணி 19.3 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சார்பில் முகமது சிராஜ், யாஷ் தயால் மற்றும் விஜயகுமார் வைசாக் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். கேமரூன் கிரின் மற்றும் கரன் சர்மா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி விளையாடி வருகிறது.
பவர் பிளே முடிவில் அந்த அணி 92 ரன்கள் குவித்துள்ளது. 23 பந்துகளில் 64 ரன்கள் விளாசிய டு பிளெசிஸ் எதிர்பாராத விதமாக சாருக் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி மற்றும் வில் ஜாக்ஸ் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: Settings-ல போயி கொஞ்சம் Brightness குறைக்க முடியுமா தெய்வமே? மீம் கிரியேட்டர்கள் சூரியனிடம் கோரிக்கை! - Heat Wave Funny Memes