சென்னை: கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்கிய 17வது ஐபிஎல் தொடரானது நாட்டின் பல்வேறு நகரங்களில் வெகு விமர்சையாக நடைபெற்று வந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று கோலாகலமாக நிறைவு பெற்றது.
இந்த தொடரின் இறுதி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் ஸ்ரேயாஸ் தலைமையிலான கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3வது முறையாக கோப்பையைத் தட்டி சென்றது.
70 லீக் போட்டிகள், 4 பிளே ஆஃப் போட்டிகள் என கடந்த 2 மாதங்களாக எண்டர்டெயின்மெண்ட் கொடுத்த வந்த 17வது ஐபிஎல் தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது. ஒவ்வொரு முறை ஐபிஎல் தொடர் நிறைவு பெறும்போது அந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு ஆரஞ்சு கேப் முதல் பர்பிள் கேப் வரை விருது வென்றவர்கள் குறித்து பார்க்கலாம்.
- ஆரஞ்சு கேப் - விராட் கோலி: இந்த தொடரில் ஆர்சிபி அணிக்காக 15 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 741 ரன்கள் சேர்த்து 'ஆரஞ்சு கேப்' விருதை வென்றுள்ளார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 2 முறை ஆரஞ்சு கேப் வென்ற இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக 2016 ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 973 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப்' விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பர்பிள் கேப் -ஹர்ஷல் படேல்: இந்த விருதினை பஞ்சாப் அணியை சேர்ந்த ஹர்ஷல் படேல் வென்று உள்ளார். 14 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தம் 24 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இது அவர் வெல்லும் 2வது பர்பிள் கேப்பாகும், இதற்கு முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக விளையாடிய ஹார்சல் படேல் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி 'பர்பிள் கேப்' விருதை வென்று இருந்தார். ஆரஞ்சு கேப் மற்றும் பர்பிள் கேப் வென்ற வீரர்கள் இருவருக்கும் 10 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.
- மதிப்புமிக்க வீரர் - சுனில் நரைன்: கொல்கத்தா அணி கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த சுனில் நரைன். இந்த தொடரின் 'Most valuable player of the season' அதிக மதிப்புமிக்க வீரர் என்ற விருதை வென்றுள்ளார். 16 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டும் அல்லாமல் 472 ரன்கள் விளாசியுள்ளார். அதேபோல் இந்த தொடருக்கான 'Man of the Series' விருதையும் அவர் வென்றுள்ளார். இதன் மூலம் 3 முறை தொடர் ஆட்டநாயகன் விருதை வெல்லும் முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சுனில் நரைன்.
- சூப்பர் சிக்ஸ் ஆஃப் தி சீசன்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இளம் வீரரான அபிஷேக் சர்மா, 'Super Six Of The Season' விருதை வென்றுள்ளார். ஹைதராபாத் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய அபிஷேக் சர்மா பல்வேறு போட்டிகளில் அதிரடியான தொடக்கத்தைத் தந்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார். நடப்பு தொடரில் 16 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 484 ரன்கள் விளாசியதுடன் 42 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.
- எலக்ட்ரிக் ஸ்ட்ரைக்கர்: டெல்லி கேபிடல்ஸ் அணியை சேர்ந்த ஃப்ரேசர்-மெக்குர்க் நடப்பு தொடரின் 'எலக்ட்ரிக் ஸ்ட்ரைக்கர் ஆஃப் தி சீசன்' விருதை வென்றுள்ளார்.
- வளர்ந்து வரும் வீரர்: வளர்ந்து வரும் இளம் வீரருக்கான விருதை 'Emerging player of the season' ஹைதராபாத் அணியை சேர்ந்த நிதிஷ் குமார் வென்றுள்ளார். அவருக்கு ரூ.20 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.
- அதிக பவுண்டரிகள்: இந்த தொடரில் 64 பவுண்டரிகள் விளாசிய டிராவிஸ் ஹெட் 'Most Fours of The Season' விருதை வென்றுள்ளார்.
- கேட்ச் ஆஃப் தி சீசன்: இந்த விருதினை கொல்கத்தா அணியின் ரமன்தீப் சிங் வென்றுள்ளார்.
இதையும் படிங்க: சிரமமே இன்றி கோப்பையைக் கைப்பற்றிய கொல்கத்தா.. 3வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது!