பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்து இருந்த வினேஷ் போகத் (Vinesh Phogat), நிர்ணயிக்கப்பட்டத்தைவிட 100 கிராம் கூடுதல் எடையுடன் இருந்ததாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பாட்டர்.
வினேஷ் போகத் ஓய்வு: இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், மல்யுத்த போட்டிகளிலிருந்து வினேஷ் போகத் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், "இனி போராட சக்தியில்லை" என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். இது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
माँ कुश्ती मेरे से जीत गई मैं हार गई माफ़ करना आपका सपना मेरी हिम्मत सब टूट चुके इससे ज़्यादा ताक़त नहीं रही अब।
— Vinesh Phogat (@Phogat_Vinesh) August 7, 2024
अलविदा कुश्ती 2001-2024 🙏
आप सबकी हमेशा ऋणी रहूँगी माफी 🙏🙏
இதுகுறித்து வினேஷ் போகத் பதிவிட்டுள்ளதாவது, ''எனக்கு எதிரான போட்டியில் மல்யுத்தம் வென்று விட்டது. நான் தோற்றுப் போய் விட்டேன். என்னுடைய கனவு, மற்றும் தைரியம் எல்லாம் முற்றிலும் நொறுங்கி விட்டது. இனி என்னிடம் போராட சக்தி இல்லை. 2001 - 2024 மல்யுத்தத்துக்கு குட் பை'' என பதிவிட்டுள்ளார்.
நடந்தது என்ன?: பாரிஸ் ஒலிம்பிக் மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன் மோதினார் வினேஷ் போகத். இதில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய வினேஷ் போகத் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதன்மூலம், வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததுடன், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். முன்னதாக நடைபெற்ற ரவுன்ட் ஆப் 16 சுற்று போட்டியில், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஜப்பான் வீராங்கனை சுசய் யுய் (Susai Yui) எதிர்கொண்டார் வினேஷ் போகத்.
தோல்வியே சந்திக்காத சுசய் யுய் எதிர்த்து கடைசிவரை போராடி 3-2 என்ற புள்ளி கணக்கில் த்ரில் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதி சுற்றில் உக்ரைனைச் சேர்ந்த ஒக்ஸானா லிவாச் என்பவரை 7-க்கு 5 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினார்.
தகுதி நீக்கம்: இதனையடுத்து நடைபெறவிருந்த இறுதிப் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா சாரா அன் ஹில்டெப்ராண்டுடன் மோத இருந்தார் வினேஷ் போகத். இந்த ஆட்டம் நேற்று இரவு நடக்க இருந்தது. ஆனால் ஒலிம்பிக் சாம்பியன், உலக சாம்பியன் என பல்வேறு வீராங்கனைகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த வினேஷ் போகத்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது, நேற்று காலையில் வினேஷ் போகத்துக்கு எடை தகுதி சோதனை நடத்தப்பட்டது. இதில் அவரது உடல் எடை 50 கிலோ 100 கிராம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஒலிம்பிக் போட்டியிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அவருக்கு எந்த பதக்கமும் வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேல்முறையீடு: ஒலிம்பிக் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் (court of arbitration for sports) மேல் முறையீடு செய்துள்ளார் வினோஷ் போகத். மேலும், தனக்கு வெள்ளிப்பதக்கம் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கிற்கான தீர்ப்பு இன்று காலை 11:30 மணிக்கு வழங்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: 4 மணி நேரத்தில் 2 கிலோ எடை குறைத்த மேரிகோம்! குறைந்த நேரத்தில் எடையை குறைப்பது எப்படி?0