சென்னை: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி முழுமையாக கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து, இன்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதுகின்றன. இந்த 3 போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணி இத்தொடரை அடுத்து இலங்கையில் நடைபெறும் ஆசியக் கோப்பை தொடரிலும், அக்டோபர் டி20 உலகக் கோப்பை தொடரிலும் விளையாட உள்ளது. இதற்கு ஆயத்தமாகும் விதமாக தென் ஆப்பிரிக்கா தொடர் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா கடைசியாக விளையாடிய மூன்று ஒருநாள் போட்டிகளில், இரண்டு சதம் அடித்து நல்ல ஃபார்மில் உள்ளார். அதேபோல், ஹர்மன்ப்ரீத் கவுர், ஷஃபாலி வர்மா ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். ரோட்ரீகஸ், ரிச்சா கோஷ் ஆகியோர் அவ்வப்போது சோபித்து வருகின்றனர். இதனால் இந்திய அணி இன்று பேட்டிங்கில் அதிரடியாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், இந்திய அணி பவுலிங்கில் வலுவாக காட்சியளிக்கிறது. ரேணுகா சிங், பூஜா வஸ்த்ராகர், அருந்ததி ராய், தீப்தி ஷர்மா உள்ளிட்ட இந்திய பவுலர்கள் இன்று சாதிக்கும் பட்சத்தில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
மற்றொருபுறம், தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கில் கேப்டன் லாவ்ரா ஊல்வர்த்தை பெரிதும் நம்பியுள்ளது. தொடக்க ஆட்டக்காரர் லாவ்ரா ஊல்வர்த் இந்தியா உடனான ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதம் அடித்து நல்ல ஃபார்மில் உள்ளார்.
மேலும், தென் ஆப்பிரிக்கா அணிக்கு மரிசான்னி காப், சுனே லூஸ் உள்ளிட்ட வீரர்கள் கைகொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இரு அணிகளும் மோதிய டெஸ்ட் போட்டிக்கு சென்னையில் ரசிகர்கள் அமோக ஆதரவை அளித்த நிலையில், இன்றைய போட்டிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் அதிகமாக வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.