கோவை: புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக கோவை வந்த இந்திய கிரிக்கெட் அணியின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட மும்பை அணியினர் ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சிகிச்சை பெற்று வரும் 14 குழந்தைகளை நேரில் சந்தித்தனர்.
அப்போது சூர்யகுமார் யாதவ் மற்றும் குழுவை, சிவப்பு ரோஜாக்களை வழங்கி சிறுவர் சிறுமியர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இதையடுத்து குழந்தைகளுக்கு மினி கிரிக்கெட் பேட்களில் கையொப்பமிட்டு இந்திய வீரர்கள் பரிசாக வழங்கினர். சில குழந்தைகளிடம் சூர்யகுமார் யாதவ் உரையாடி அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
தங்களுக்கு பரிசளித்த சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோருக்கு அவர்களின் உருவப்படம் பொறித்த நினைவுப் பரிசை குழந்தைகள் வழங்கினர். இந்த குழந்தைகள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுமென சூர்யகுமார் யாதவ் மற்றும் குழுவினர் வாழ்த்தினர்.
இதையடுத்து, இந்த வார்டில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் சிகிச்சையின் காலம் குறித்து சூர்யகுமார் யாதவ், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் இயக்குனர் டாக்டர்.பி.குகனிடம் கேட்டறிந்தார். குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து இந்திய அணி வீரர்களிடம் சிகிச்சை மையத்தின் இயக்குநர் டாக்டர் பி.குகன் விளக்கினார்.
இந்த சிகிச்சை மையம் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே அப்துல் கலாமால் கடந்த 2005ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இதில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இலவசமாக சிகிச்சை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னை பார்முலா 4 கார் பந்தயம்: முதல் நாள் முழு அட்டவணை! - Chennai Formula 4 Race