திருநெல்வேலி: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் சேலத்தில் கடந்த 5ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெற்றது. அதனை தொடர்ந்து 2ஆம் கட்ட லீக் போட்டிகள் கோயம்புத்தூரில் நடைபெற்று முடிவடைந்த நிலையில், 3ஆம் கட்ட லீக் போட்டிகள் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக திண்டுக்கல், சேலம், கோவை, திருச்சி உள்ளிட்ட அனைத்து அணிகளின் வீரர்களும் திருநெல்வேலி வந்துள்ளனர்.
அல்வா ருசித்த அஸ்வின்: இந்தநிலையில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனாக உள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நேற்று மாலையில் தனது நண்பர்களுடன் நெல்லை டவுனில் உள்ள இருட்டு கடைக்கு சென்று அல்வா வாங்கி ருசித்தார். பின்னர் அணியின் சக வீரர்களுக்கும் அல்வா வாங்கிக் கொடுத்தார்.
அப்போது அங்கு கடைக்கு வந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் அஸ்வின் உள்ளிட்ட சக வீரர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதற்கிடையில் திருநெல்வேலி அல்வா மட்டும் எப்படி இவ்வாறு ருசியாக இருக்கிறது என கடையின் உரிமையாளரிடம் கேட்டு விவரங்களை தெரிந்து கொண்டார் அஸ்வின்.
உலக அளவில் புகழ்பெற்ற இருட்டு கடை அல்வா நாள்தோறும் மாலை மட்டும் தான் கிடைக்கும். மாலை சரியாக 5 மணிக்கு கடை திறப்பார்கள். இதற்காக மாலை 3 மணிக்கெல்லாம் நூற்றுக்கணக்காணோர் வரிசையில் இருப்பார்கள். இது போன்ற நிலையில் இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின், இருட்டுக் கடை அல்வாவை நேரில் சென்று ருசித்த சம்பவம் நெல்லை மக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: அருண் கார்த்திக் அதிரடி வீண்.. நெல்லையை வென்று புள்ளிப் பட்டியலில் முன்னேறிய திருச்சி!