சென்னை: ஒன்பதாவது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில் தற்போது, சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆன்டிகுவாவில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா - வங்கதேசம் ஆகிய அணிகள் விளையாடின.
இந்தியா வெற்றி: இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 196 ரன்கள் குவித்தது. அடுத்ததாக களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்து. இதன் மூலம் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணிக்காக விராட் கோலி 28 பந்துகளில் 3 சிக்ஸர்கள்,1 பவுண்டரிகள் வீதம் 37 ரன்கள் அடித்து டன்ஸிம் ஹசன் பந்தில் அவுட்டானார்.
கோலி சாதனை: இதன்மூலம் டி20 மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளில் 3000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். அடுத்துள்ள இடங்களில் ரோஹித் சர்மா(2637 ரன்கள்), டேவிட் வார்னர்(2502 ரன்கள்), சச்சின் டெண்டுல்கர்(2278 ரன்கள்), குமார் சங்கக்காரா(2193 ரன்கள்) ஆகியோர் உள்ளனர்.
2014, 2016 ஆம் ஆண்டுகளில் தொடர் நாயகன்: டி20 உலகக்கோப்பையில் மொத்தம் 32 போட்டிகள் விளையாடி 129.78 ஸ்டிரைக் ரேட்டில் 40 அரைசதம் உட்பட 1,207 ரன்கள் குவித்துள்ளார். இவரது பேட்டிங் சராசரி 63.52 ஆகும். மேலும் 2014 மற்றும் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருதையும் கோலி வென்றுள்ளார்.
உலகக்கோப்பையில் 3,000 ரன்கள் குவிப்பு: 50 ஓவர் உலகக்கோப்பையை பொறுத்தமட்டில் 37 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 88.20 ஸ்டிரைக் ரேட்டில் 1795 ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங் சராசரி 59.83 ஆகும். 2023ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக, கோலி உலகக்கோப்பையில் டி20 மற்றும் 50 ஓவர் என இரண்டு வடிவங்களிலும் 67 இன்னிங்ஸ்களில் 61.26 சராசரியுடன் 5 சதங்கள் மற்றும் 26 அரைசதங்கள் உட்பட மொத்தமாக 3,002 ரன்களைக் குவித்து சாதனை படைத்துள்ளார். விராட் கோலியின் சாதனையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.