சென்னை: இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடியது. 5 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்தியா அணி தொடரை 4-க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. அந்த போட்டியில் அஸ்வின் தனது 500வது விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்தார்.
பின்னர் அப்போட்டியில் இரண்டாம் நாள் ஆட்டத்தில் அஸ்வின் திடீரென்று தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் போட்டியில் இருந்து பாதியில் விலகி சென்னை செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் அப்போட்டியிலிருந்து விலகி சென்னை சென்றார். மீண்டும் தனது தாயாரின் உடல்நிலை சீரான பிறகு இந்திய அணியுடன் இணைந்தார்.
அஸ்வின், தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத போது கேப்டன் ரோகித் சர்மா உதவியது குறித்து வீடியோ ஒன்றில் பேசி உள்ளது தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், "எனது தாயார் உடல்நிலை சரியில்லாத செய்தி கேட்டு நிலை குலைந்து இருந்தேன். அப்போது ரோகித் சர்மா என்னை சென்னைக்கு உடனே கிளம்ப சொன்னார். ஆனால் அப்போது ராஜ்கோட் விமான நிலையத்தில் இரவு நேரத்தில் விமானச் சேவை இருக்காது.
அந்த நேரத்தில் ரோகித் சர்மா தனி விமானம் ஏற்பாடு செய்ய முன்வந்தார். அதுமட்டுமின்றி எனது மனநிலை குறித்து அவ்வப்போது தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டே இருந்தார். நான் அவரிடம் சிறந்த தலைமைப் பண்பை பார்க்கிறேன். ரோகித் சர்மா பெரிய மனசுக்குச் சொந்தக்காரர். அதனால் தான் தோனியை போல் கேப்டனாக 5 முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ளார்" எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: இந்தியா நம்பர் ஒன்! மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் நம்பர் ஒன்!