ராஞ்சி: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இத்தொடரில் ஏற்கனவே 3 போட்டிகள் நடைபெற்றுள்ளது. அதில் இந்தியா 2 போட்டிகளிலும், இங்கிலாந்து 1 போட்டியையும் வென்று 2-1 என்ற கணக்கில் உள்ளன.
இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி ராஞ்சியின் ஜேஎஸ்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம், ஆகாஷ் தீப் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார். இங்கிலாந்து அணியில் ஒல்லி ராபின்சன் மற்றும் சோயப் பஷீர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகின்றது. இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பின் அபார பந்து வீச்சில் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து 3 விக்கெட்களை இழந்தது. பென் டக்கெட் 11, ஒல்லி போப் 0, ஜாக் கிராலி 42 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதனைத் தொடர்ந்து களம் கண்ட ஜானி பேர்ஸ்டோவ் 38 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோ ரூட்டுடன், பென் ஃபோக்ஸ் கைகோர்த்தார். இந்த கூட்டணி இங்கிலாந்து அணிக்கு ரன்களை சேர்த்தது. தொடந்து சிறப்பாக விளையாடிய இந்த கூட்டணி 113 ரன்கள் சேர்த்தபோது சிராஜ் பந்து வீச்சில் பிரிந்தது. பென் ஃபோக்ஸ் 47 ரன்களில் வெளியேறினார்.
இருப்பினும், தொடர்ந்து நிதானமாக விளையாடிய ஜோ ரூட் சதம் விளாசினார். இது அவரது 31வது டெஸ்ட் சதம் ஆகும். அதேபோல், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 10வது டெஸ்ட் சதம் ஆகும். இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 302 ரன்கள் சேர்த்துள்ளது.
ஜோ ரூட் 106 ரன்களுடனும், ஒல்லி ராபின்சன் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணியின் சார்பில் ஆகாஷ் தீப் 3, சிராஜ் 2, அஷ்வின் மற்றும் ஜடேஜா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். மேலும், போட்டியின் இரண்டாவது நாள் நாளை காலை 9 மணிக்கு தொடங்கும்.
இதையும் படிங்க: சென்னையில் நடக்கும் முதல் போட்டி.. வெளியான 2024 ஐபிஎல் அட்டவணை!