ராஜ்கோட்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விளையாடி வருகின்றது. இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்து இரு அணிகளும் தலா 1 வெற்றியை பெற்று 1-க்கு 1 என்ற கணக்கில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்ஸை விளையாடியது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 326 ரன்கள் சேர்த்திருந்தது. ஜடேஜா 110 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று (பிப்.16) பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 131 ரன்களும், ஜடேஜா 110 ரன்களும், சஃப்ராஸ் கான் 62 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி சார்பில் மார்க் வுட் 4 விக்கெட்களும், ரெஹான் அகமது 2 விக்கெட்களும், மற்ற வீரர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், டாம் ஹார்ட்லி மற்றும் ஜோ ரூட் ஆகியோர் தலா 1 விக்கெட்களை கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது. தொடக்க வீரரான பென் டக்கெட் 133 ரன்களுடனும், ஜோ ரூட் 9 ரன்களுடனும் களத்தில் உள்ள நிலையில், இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்துள்ளது.
இதில் ஜாக் கிராலியின் விக்கெட்டை கைப்பற்றிய போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 500வது விக்கெட்களை கைப்பற்றினார். இதன் மூலம் குறைந்த இன்னிங்ஸில் 500 விக்கெட்களை கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்த பட்டியலில் 87 இன்னிங்ஸில் 500 விக்கெட்கள் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து ரவிச்சந்திரன் அஷ்வின் 98 இன்னிங்ஸில் 500 விக்கெட்களை கைப்பற்றி இரண்டாவது இடத்தில் உள்ளார். மேலும், 3வது நாள் ஆட்டம் நாளை காலை 9 மணி அளவில் தொடங்க உள்ளது.
இதையும் படிங்க: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்கள் - சாதனை படைத்த அஷ்வின்!