நியூயார்க்: 9வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கி ஜூன் 29ஆம் தேதி வரை அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஜூன்.9) நடைபெறும் 19வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பாகிஸ்தான் அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் தோல்வியை தழுவியது. நடப்பு சீசனை தோல்வியுடனே பாகிஸ்தான் அணி ஆரம்பித்து உள்ளது. பொதுவாக அமெரிக்கா மைதானங்கள் பந்துவீச்சாளர்களுக்கும், பேட்ஸ்மேன்களுக்கும் சவாலானதாக அமைந்து காணப்படுகிறது.
இதனால், நியூயார்க் மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமையுமா பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் பலமாக கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பன்ட், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோர் உள்ளனர்.
கடந்த போட்டியில் விராட் கோலி 1 ரன்னில் அவுட்டானாலும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான அவரது ஆட்டம் என்பது எப்போதும் சரவெடி போன்றதாகத் இருக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் அவர் நிச்சயம் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கிடைக்கும் வாய்ப்பை இளம் வீரர் ஷிவம் துபே சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அணியில் அவருக்கான இடத்தை தேட வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுவார்.
பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங்கில் பலமாக முகமது ரிஸ்வான், பாபர் அசாம், உஸ்மான் கான், பக்கர் ஜமான், ஷதாப்கான் ஆகியோர் உள்ளனர். அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் பாபர் அசாம், ஷதாப் கான் மட்டுமே சிறப்பாக ஆடினார். இருப்பினும் சூபர் ஒவரில் அந்த அணி அமெரிக்காவிடம் மண்ணை கவ்வியது.
பந்துவீச்சைப் பொறுத்தவரை பாகிஸ்தான் அணியில் ஷாகின் அப்ரிடி, ஹாரிஸ் ராப், நசீம் ஷா, அமீர் ஆகியோர் சிறப்பாக பந்துவீசக் கூடிய வீரர்கள் தான். இவர்கள் அனைவரும் சிறப்பாக பந்துவீசினால் இந்திய அணிக்கு அது நெருக்கடியாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்திய அணியில் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் பலமாக உள்ளனர்.
அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் இன்றைய ஆட்டத்திலும் மாயாஜாலத்தை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சை பொறுத்தவரை வழக்கம் போல் ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல் அணிக்கு சிறப்பாக விளையாடி பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி கொடுப்பார்கள்.
இரு அணிகளும் மோதும் இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று (ஜூன்.9) இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரலையில் காணலாம்.
இதையும் படிங்க: இலங்கையை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற வங்கதேசம்.. நுவான் துஷாரா முயற்சி வீண்! - T20 WORLD CUP 2024