ஐதராபாத்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 4 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதுகிறது.
இந்த தொடரை இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கு முன்னதாக நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. நவம்பர் 8 முதல் 15ஆம் தேதி வரை டர்பன், க்கெபெர்ஹா, செஞ்சூரியன் மற்றும் ஜோகன்னஸ்பெர்க் ஆகிய மைதானங்களில் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் இடைப்பட்ட காலத்தில் இந்திய அணி வங்கதேசத்துடன் விளையாடுகிறது. அதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. மேலும் இங்கிலாந்து இடையிலான ஒயிட் பால் சீரிஸிலும் இந்திய அணி விளையாட உள்ளது.
கடந்த ஆண்டும் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. அதில் ஒருநாள் தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர் தலா 1-க்கு 1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தன.
இது தொடர்பாக தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "KFC டி20 தொடர் நான்கு போட்டிகள் கொண்டதாக நவம்பர் 8 வெள்ளிக்கிழமை டர்பனில் உள்ள ஹாலிவுட்பெட்ஸ் கிங்ஸ்மீட் மைதானத்தில் தொடங்குகிறது. அடுத்த போட்டி நவம்பர் 10ஆம் தேதி க்கெபர்ஹாவில் உள்ள டபாபெட் செயின்ட் ஜார்ஜ் பூங்காவில் நடைபெற உள்ளது.
நவம்பர் 13ஆம் தேதி சூப்பர் ஸ்போர்ட் பார்க்கில் 3வது போட்டி நடைபெறுகிறது. மேலும் நவம்பர் 15ஆம் தேதி தொடரின் 4வது மற்றும் இறுதிப் போட்டி டிபி வேர்ல்ட் வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெறுவதாக" அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டில் வங்கதேசத்தை அசால்டாக வீழ்த்திய ஆஸ்திரேலியா! - T20 World Cup 2024