நியூயார்க்: நடப்பு உலகக் கோப்பை தொடர் (T20 WORLD CUP) அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்யில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 25வது லீக் போட்டியில் இந்தியா (IND) - அமெரிக்கா (USA) அணிகள் மோதின. நியூயார்க்கில் உள்ள நாசவ் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் அமெரிக்க அணியின், ஓபனிங் பேட்மேன்களாக ஜஹாங்கீர் மற்றும் ஸ்டீவன் டெய்லர் ஆகியோர் களமிறங்கினர். அதில், அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் பந்திலேயே ஜஹாங்கீர் அவுட் ஆகினார். இதனையடுத்து களமிறங்கிய ஆண்ட்ரீஸ் கௌஸ், 2 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட் கொடுத்து வெளியேறினார்.
இவ்வாறாக முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடி காட்டினார் அர்ஷ்தீப். இதனையடுத்து களமிறங்கிய ஜேம்ஸ் 22 ரன்கள், ஸ்டீவன் டெய்லர் 24 ரன்கள், நிதிஷ் குமார் 27 ரன்கள் ஆகியோர் சுமாரான பங்களிப்பை அளித்து வெளியேறினர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது அமெரிக்கா. இந்திய அணிதரப்பில் அபாரமாகப் பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
இதனையடுத்து, 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் ஓபனிங் பேட்மேன்களாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இதில் முதல் ஓவரின் இரண்டாம் பந்தில் கோலி டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
இதனையடுத்து கேப்டன் ரோகித் சர்மா 3 ரன்களுக்கு வெளியேற, அடுத்த வந்த ரிஷப் பண்ட் 18 ரன்களுக்கு வெளியேறினார். இதனால் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது இந்திய அணி. இதன் பின்னர் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷிவம் துபே சரிவில் இருந்த அணியை மீட்டு வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர்.
அமெரிக்காவிற்கு பெனல்டி: இருப்பினும் அமெரிக்க பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாகப் பந்துகளை வீசினர். ஒரு கட்டத்தில் 30 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த போது அமெரிக்கா பந்து வீச கூடுதல் நேரம் எடுத்து கொண்டதால், இந்திய அணிக்கு 5 ரன்கள் வழங்கப்பட்டது.
இறுதியாக சூர்யகுமார் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என அரை சதம் விளாச, ஷிவம் துபே 1 சிக்ஸர் 1 பவுண்டரி என 31 ரன்கள் விளாசினார். இதனால், 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
சூப்பர் - 8 சுற்று : நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய 3 அணிகளையும் வீழ்த்தி ஹாட்ரீக் வெற்றியைப் பதிவு செய்த இந்தியா, குரூப் ஏ பிரிவில் முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.
இதையும் படிங்க: கட்டுக்கோப்பாகப் பந்து வீசிய கனடா.. முதல் வெற்றியைப் பதிவு செய்த பாகிஸ்தான்!