கயானா (வெஸ்ட் இண்டீஸ்): டி20 உலகக் கோப்பையில் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து இடையேயான போட்டி கயானாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. ரோகித் பவுண்டரியுடன் இன்னிங்ஸை துவக்கினார். மறுமுனையில் சிக்சர் அடித்த விராட் கோலி, டாப்லியின் அடுத்த பந்தில் மீண்டும் சிக்ஸ் அடிக்க முயன்று 9 ரன்களுக்கு போல்டானார். பின்னர் வந்த ரிஷப் பண்ட், பவுண்டரி அடித்த வேகத்தில் 4 ரன்களுக்கு அவுட்டானார்.
இதனையடுத்து ரோகித்துடன் இணைந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடினார். தனக்கு வீசப்பட்ட பந்துகளை ஸ்வீப் ஷாட்களாக ஆடி சிக்சர் அடித்தார். தனது நல்ல ஃபார்மை தொடர்ந்த ரோகித் சர்மா, அரைசதம் அடித்தார். மழை பெய்து பிட்ச்சில் வேகம் குறைந்ததால் ஸ்பின்னர்களுக்கு உகந்ததாக மாறியது. அதன் விளைவாக அதில் ரஷித் வீசிய பந்தில் ரோகித் சர்மா, 57 ரன்களுக்கு போல்டானார். இதனைதொடர்ந்து களமிறங்கிய பாண்டியா அதிரடி காட்டினார். மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் 47 ரன்களுக்கு அவுட்டானார். பாண்டியா 23 ரன்களுக்கு ஜோர்டான் பந்தில் அவுட்டானார்.
India advance to the #T20WorldCup 2024 Final 🇮🇳🔥
— ICC (@ICC) June 27, 2024
A dominant all-round display sinks England's title defence hopes in Guyana 👏#INDvENG | 📝: https://t.co/Yg371CLjqn pic.twitter.com/jxdP5s9xZg
பின்னர் களமிறங்கிய ஷிவம் தூபே வந்த வேகத்தில் டக் அவுட்டாகி ஏமாற்றினார். இதனைதொடர்ந்து களமிறங்கிய அக்சர் படேல் 10 ரன்களுக்கு அவுட்டானார். முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. கடினமாக இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. இந்த நேரத்தில் 3வது ஓவர் அக்சர் படேலுக்கு கொடுக்கப்பட்டது. அதன் விளைவாக ஆபத்தான பட்லர் 23 ரன்களுக்கு அவுட்டானார். தொடர்ச்சியாக ஃபிலிப் சால்ட் 5 ரன்களுக்கு பும்ரா பந்தில் போல்டானார்.
தொடர் முழுவதும் பெரிய அளவில் சோபிக்காத மொயின் அலி 8 ரன்களுக்கு அக்சர் பந்தில் ஸ்டம்பிங் செய்யப்பட்டு அவுட்டானார். சாம் கரண் 2 ரன்களுக்கு நடையை கட்ட, இங்கிலாந்து அணி 49 ரன்களுக்கு 5 விக்கெட்கள் இழந்து திணறியது. அந்த நேரத்தில் அணியை மீட்கும் முயற்சியில் அதிரடியாக ஆடிய ப்ரூக் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில், குல்தீப் பந்தில் போல்டானார். மற்றொரு புறம் அதிரடி வீரர் லிவிங்ஸ்டன் 11 ரன்களுக்கு ஆர்ச்சர் ஏற்படுத்திய குழப்பத்தில் ரன் அவுட்டானார்.
இதனையடுத்து இந்தியாவின் வெற்றி கிட்டதட்ட உறுதியானது. கடைசி நேரத்தில் சற்று அதிரடி காட்டிய ஆர்ச்சர் 21 ரன்களுக்கு பும்ராவிடம் சரணடைந்தார். இங்கிலாந்து அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. நாளை (ஜூன் 29) பார்படாஸில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா அணி, தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.