பிரிட்ஜ்டவுன்: 20 அணிகள் பங்கேற்று நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 17வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதின.
கென்ஸிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்து அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் 16 பந்துகளில் 39 ரன்கள் குவித்த வார்னர், மொயின் அலி வீசிய பந்தில் கிளின் போல்ட் ஆகி வெளியேறினார். அவரை தொடர்ந்து மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்மேனான டிராவிஸ் ஹெட் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆஸ்திரேலியா கேப்டம் மிட்செல் மார்ஸ் 35 ரன்களிலும், மேக்ஸ்வெல் 28 ரன்களிலும் ஆட்டமிழக்க, டிம் டேவிட் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
இறுதியில் களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் 17 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரி என 30 ரன்கள் விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா. நடப்பு உலகக்கோப்பை தொடரில் பதிவு செய்யப்படும் முதல் 200+ ஸ்கோர் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபில் சால்ட் மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர் களமிறங்கினர். இருவரும் இணைந்து வலுவான தொடக்கத்தைக் கொடுத்தனர். குறிப்பாகப் போட்டியின் 2வது ஓவரை ஸ்டார்க் வீச அந்த ஓவரில் 2வது பந்தில் 106 மீ சிக்ஸர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் சால்ட்.
மற்றொரு புறம் கேப்டன் பட்லர் தன்னுடைய பங்கிற்கு சில சிக்சர்களையும், பவுண்டரிகளையும் பறக்கவிட்டு கொண்டு இருந்தனர். ஆனால் இந்த இருவரும் பார்ட்னர்ஷிப்பையும் தகர்த்தெறிந்தார் ஆடம் ஜாம்பா, போட்டியின் 7வது ஓவரை வீசிய அவர் முதலில் சால்ட்டை(37 ரன்), போல்ட் ஆக்கினார்.
அதனை தொடர்ந்து பட்லரை(42 ரன்) வெளியேற்றினார். இதனைத் தொடர்ந்து வலுவான நிலையிலிருந்த இங்கிலாந்து அணி சரிவை நோக்கிச் சென்றது. மூன்றவதாக களமிறங்கிய வில் ஜாக்ஸ் 10 ரன்களுக்கும், ஜானி பேர்ஸ்டோ 7 ரன்களுக்கு வெளியேற, அடுத்து வந்த மொயின் அலி சற்று நிதனமாக ஆடிய நிலையில் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த இங்கிலாந்து வீரர்கள் ஆஸ்திரேலியா பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் இங்கிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.
இதையும் படிங்க:20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை!