ஐதராபாத்: டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், 5 இடங்கள் முன்னேறி 6வது இடத்தை பிடித்துள்ளார். தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஓர் இடம் பின்தங்கி 4வது இடத்தில் உள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளின் 6 இன்னிங்ஸ்களிலும் சோபிக்காத இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளனர். இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி 8 இடங்கள் சரிந்து 22வது இடத்தையும், இந்திய கேப்டன் ரோகித் சர்மா 2 இடங்கள் சரிந்து 26வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இதில் கடந்த 10 ஆண்டுகளாக டாப் 20 வரிசையில் வலம் வந்த விராட் கோலி முதல் முறையாக டாப் வீரர்கள் வரிசையில் இருந்து கீழ் இறங்கி உள்ளார். மூன்றாவது டெஸ்ட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 82 ரன்கள் விளாசிய டேரில் மிட்சல் 8 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
வழக்கம் போல இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் முதல் இடத்தில் தொடர்கிறார். நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் 2வது இடத்திலும், இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் 3வது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலியா வீரார் ஸ்டீபன் ஸ்மித் 5வது இடத்தில் உள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 90 ரன்கள் விளாசிய இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் 4 இடங்கள் முன்னேறி 16வது இடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்து வீரர் வில் யங் 29 இடங்கள் முன்னேறி 44வது இடத்தைப் பிடித்துள்ளார். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா வீரர் கஜிசோ ரபாடா முதல் இடத்தில் தொடர்கிறார்.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 2 இடங்கள் முன்னேறி 6வது இடத்தையும், ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு இடம் சரிந்து 5வது இடத்திலும், ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் ஒரு இடம் முன்னேறி 4வது இடத்தையும் பிடித்துள்ளனர். மற்றொரு இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா 3வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார்.
இதையும் படிங்க: இவங்கலாம் இறங்குனா ரூ.20 கோடி தான்.. அதிக தொகைக்கு ஏலம் போக வாய்ப்புள்ள டாப் வீரர்கள்! யாரார் தெரியுமா?