டெல்லி: பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று தந்த இந்திய வீராங்கனை மனு பாக்கர் இன்று (ஆக.7) நாடு திரும்பினார். ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வழக்கத்தை விட ஏர் இந்தியா விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக வந்த போதிலும், அயராமல் காத்திருந்த இந்திய ரசிகர்கள், மனு பாக்கர் தங்கள் தோள்கள் மீது தூக்கி வைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பாரீஸ் ஒலிம்பிக்கில் 22 வயதான மனு பாக்கர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஒற்றையர் மற்றும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் என இரண்டு பிரிவுகளில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
#WATCH | Double Olympic medalist in shooting, Manu Bhaker and her coach Jaspal Rana receive a grand welcome after they arrive at Delhi airport after Manu Bhaker's historic performance in #ParisOlympics2024
— ANI (@ANI) August 7, 2024
She won bronze medals in Women’s 10m Air Pistol & the 10m Air Pistol… pic.twitter.com/h7syhyk1Sy
ஒலிம்பிக் வரலாற்றில் ஒரு சீசனில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை மனு பாக்கர் படைத்தார். 25 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த மனு பாக்கர் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டார். அந்த பிரிவில் மனு பாக்கர் 4வது இடத்தை பிடித்து வெண்கலம் வெல்ல தவறினார்.
அந்த போட்டியில் மட்டும் பதக்கம் வென்று இருந்தால் ஒரு ஒலிம்பிக் போட்டியில் மூன்று பதக்கங்களை வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை மனு பாக்கர் படைத்து இருப்பார். மேலும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கருடன் சேர்ந்து மற்றொரு இந்திய வீரர் சரப்ஜோத் சிங் வெண்கலம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
விமான நிலையம் வந்த மனு பாக்கருக்கு பொது மக்கள் ரசிகர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். மலர் கொத்துகள் வழங்கியும், மனு பாக்கரை தோள் மீது சுமந்து ஊர்வலமாக கொண்டு சென்றும் உற்சாகமாக கொண்டாடி தீர்த்தனர். மனு பாக்கரை வரவேற்க அவரது பெற்றோர் ராம் கிஷன் மற்றும் தாய் சுமேதா ஆகியோர் விமான நிலையத்திற்கு வந்து இருந்தனர்.
மேலும் அவர்களுடன், அரியானா, ராஜஸ்தான், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களை சேர்ந்த மூத்த அதிகாரிகளும் விமான நிலையம் விரைந்து மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மத்திய விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்திக்கும் மனு பாக்கர், தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை மீண்டும் பாரிசுக்குச் செல்கிறார். பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்தியக் கொடியை மனு பாக்கர் ஏந்திச் செல்வது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதி? என்ன நடந்தது? - Paris Olympics 2024