இந்தூர்: இந்திய அணியில் அவ்வப்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் ஹனுமா விஹாரி, அரசியல் காரணங்களால்தான் தன்னை ரஞ்சி கோப்பையில் ஆந்திரா அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கி உள்ளதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
நடப்பாண்டு ரஞ்சி கோப்பையின் காலிறுதிப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மத்தியப் பிரதேச அணிக்கு எதிரான போட்டியில், ஆந்திரா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. நடப்பாண்டு ரஞ்சியில் ஆந்திர அணியை முதல் போட்டியில் ஹனுமா விஹாரியே தலைமை தாங்கினார். ஆனால், அதன்பின் ரிக்கி பூய் என்பவர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில்தான் ஹனுமா விஹாரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படியான பதிவை பதிவிட்டுள்ளார்.
அதில், "சில உண்மைகளைச் சொல்வதற்காக இந்த பதிவை பதிவிடுகிறேன். பெங்கால் அணிக்கு எதிரான முதல் போட்டியில் கேப்டனாக இருந்தேன். அந்த ஆட்டத்தின்போது 17வது வீரரை திட்டினேன். அப்போது அவர் அரசியல்வாதியாக இருக்கக்கூடிய அவரது தந்தையிடம் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, அவரது தந்தை அணி நிர்வாகத்தை அனுகி, என் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டார்.
கடந்த ஆண்டு பெங்கால் அணிக்கு எதிராக 410 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றிருந்தோம். என் மீது எவ்வித தவறும் இல்லை. ஆனால், என்னை கேப்டன் பதவியிலிருந்து விலகிக் கொள்ளும்படி கூறி வற்புறுத்தினர். நான் அந்த வீரரை தனிப்பட்ட முறையில் கண்டிக்கவில்லை.
கடந்த 7 ஆண்டுகளில் ஆந்திரா அணியை 5 முறை நாக் அவுட் சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளேன். இந்தியாவுக்காக 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளேன். ஆனால், என்னை விட அந்த வீரர் அணிக்கு முக்கியம் என அணி நிர்வாகம் நினைத்துவிட்டது. அந்த சமயம் நான் மிகவும் வருந்தினேன். ஆனால், கடைசி வரை அணியில் விளையாடியதற்கு ஒரே ஒரு காரணம் மட்டும்தான். விளையாட்டு மீதும், எனது அணியின் மீதும் நான் வைத்திருந்த மரியாதையே அதற்குக் காரணம்.
அணி நிர்வாகம் எதைக் கூறினாலும், அதை வீரர்கள் கேட்க வேண்டும் என நினைக்கிறார்கள். எனது சுயமரியாதைக்கு மதிப்பு கொடுக்காத அணியில் தொடர்ந்து விளையாட எனக்கு விருப்பமில்லை. நாங்கள் ஒவ்வொரு சீசனிலும் முன்னேற்றம் அடைந்து வந்தோம். ஆனால், நிர்வாகம் அதை விரும்பவில்லை" என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
ஹனுமா விஹாரி, அந்த 17வது வீரர் யார் என்று குறிப்பிடவில்லை. இந்நிலையில், இவரது பதிவைத் தொடர்ந்து, ஆந்திர அணியைச் சேர்ந்த பிருத்விராஜ் என்பவர், "நான்தான் அந்த 17வது வீரர். இந்த பதிவின் மூலம் அனுதாபம் ஈட்ட முயல்கிறார். அன்றைய தினம் என்ன நடந்தது என்று அணி வீரர்கள் அனைவரும் அறிவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் வைரலான நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் பக்கத்தில், ஹனுமா விஹாரிக்கு ஆதரவான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "ஓய்எஸ்ஆர்-இன் பழிவாங்கும் அரசியலுக்கு ஆந்திர கிரிக்கெட் சங்கம் துணைபோவது வெட்கக்கேடானது. ஹனுமா விஹாரி ஒரு சிறந்த வீரர்.
தனது மாநிலத்திற்காக விளையாட மாட்டேன் எனக் கூறும் அளவிற்கு அவரை குறிவைத்துள்ளனர். ஹனுமா விஹாரி, நீங்கள் உறுதியாக இருங்கள். விளையாட்டின் மீதான உங்களின் ஈடுபாடும், அர்ப்பணிப்பும் பாராட்டக்கூடியது. நாங்கள் உங்களோடு நிற்கிறோம். நீதி வெற்றி பெறுவதை உறுதி செய்வோம்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் விளாசல்! நமீபிய வீரர் சாதனை!